உள்ளூர்ப் பகுதிகளுக்குக் கூடுதல் சுற்றுப்பயணிகளை ஈர்க்க முயற்சி: ஜப்பான்

2 mins read
66dfbab2-4d77-49b4-a7a8-f774815ca3a8
ஜப்பானின் கியோட்டோ போன்ற வட்டாரங்களுக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் செல்வது வழக்கம். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானிய அரசாங்கம் தனது நாட்டிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை 2030ஆம் ஆண்டுக்குள் 60 மில்லியனுக்கு உயர்த்த திட்டமிடுகிறது.

அத்தகையோரின் செலவுகளை 15 டிரில்லியன் யென்னுக்கும் உயர்த்த அரசாங்கம் ஆலோசிக்கிறது.

இவ்வாண்டின் முதல் பாதியில் ஜப்பானுக்குச் சென்ற சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவில் உயர்ந்தது. கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பின் அதிகரித்த சுற்றுப்பயணங்களும் வலுவிழந்த ஜப்பானிய யென்னும் அதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.

அரசாங்கத்தின் இலக்கை எட்ட வட்டாரப் பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதேவேளை, குடியிருப்பாளர்களைப் பாதிக்கக்கூடிய வகையில் அளவுக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருவதையும் கட்டுப்படுத்தவேண்டும்.

கைவினைப் பொருள்களைச் செய்து பார்க்க வாய்ப்பளிக்கும் பிரபல நிக்கோ போன்ற தளங்களுக்கு கூடுதலானோரைக் கவர ஜப்பானியச் சுற்றுப்பயண அமைப்பு முயல்கிறது.

ஜப்பானுக்குச் செல்வோர் பெரும்பாலும் பார்க்க விரும்பும் இடங்களான தோக்கியோ, கியோட்டோ, ஒசாக்கா ஆகியவற்றைத் தவிர உள்ளூர் வட்டாரங்களில் உள்ள இதர இடங்களுக்கும் அவர்கள் செல்வதை உறுதிசெய்ய அது திட்டமிடுகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை அமைப்பு பெரும்பாலும் குறிவைத்துள்ளது. அத்தகையோர் ஜப்பானில் குறைந்தது ஒரு வாரத்துக்கும் மேல் தங்குவதோடு அவர்கள் அதிகம் செலவு செய்கின்றனர்.

ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜப்பான் சென்ற பிரிட்டன் சுற்றுப்பயணிகள் ஆக அதிகமாக 444,000 யென்னைச் செலவு செய்தனர். பிரிட்டனை அடுத்து இத்தாலியையும் ஜெர்மனியையும் சேர்ந்தவர்கள் அதிகம் செலவு செய்தனர்.

கூடுதல் காலத்துக்கு ஜப்பானில் தங்குவோர் ஜப்பானின் வரலாற்றையும் கலாசாரத்தையும் அனுபவிப்பதோடு நான்கு பருவங்களையும் காண விரும்புவதாக ஜப்பான் சுற்றுப்பயண அமைப்பு சொன்னது.

எனவே உள்ளூர் வட்டாரங்களில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் செய்யும் செலவு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்