கடல் சிங்கத்தைக் காப்பாற்ற ஒரு மாதம் போராடிய ஆர்வலர்கள்

2 mins read
7b259b6b-62f8-4adb-90e8-5d7b7191a078
கழுத்தில் கயிறு ஒன்று சிக்கிய நிலையில் 149 கிலோகிராம் எடைகொண்ட பெண் கடல் சிங்கம் தத்தளித்துக்கொண்டிருந்தது. - படம்: கனடாவின் கடல், மீன்வளத்துறை காணொளியில் இருந்து எடுக்கப்பட்டது.

வன்கூவர்: கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் கவ்விசான் கடற்கரையில் ஒரு பெண் கடல் சிங்கம் கழுத்தில் கயிற்றுடன் சிக்கி தத்தளித்தது.

அதனைத் தேடிக் காப்பாற்ற ஒரு மாத காலமாகக் கடல்வாழ் உயிரின நிபுணர்கள் அப்பகுதியைச் சுற்றி வந்தனர். பலனன்றி, கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அவர்கள் திரும்ப முடிவெடுத்த நேரத்தில் கனடாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு விடுதியின் முன் உள்ள கடற்பகுதியில் 149 கிலோ கிராம் எடைகொண்ட அந்த விலங்கு தென்பட்டதாகத் தகவல் வந்தது.

கழுத்தைச் சுற்றியிருந்த ஆரஞ்சு நிறக்கயிறு, கடல்சிங்கத்துக்கு ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் அது இருந்தது. அதற்கு உதவிட ஒன்பது இயற்கை ஆர்வலர்களும் பணியில் ஈடுபட்டனர்.

‘ஸ்டெலர் சீ லையன்ஸ்’ என வகைப்படுத்தப்பட்ட அந்தக் கடல்சிங்கத்தை அவர்கள் தேடிக் கண்டுபிடித்து உடனே மயக்க மருந்தைச் செலுத்தி, கழுத்தை இறுக்கிய கயிற்றை அகற்றினர். விலங்குகளை இவ்வித பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவது சுலபமானதல்ல.

கடல் சிங்கம் மயக்கமடைவதற்கு முன்பும் மயக்கம் தெளிந்ததும் கட்டுப்படுத்த முடியாத வகையில் செயல்படும். மிகவும் பரிவாகவும் துல்லியமாகவும் செயல்பட்டால்தான் அவற்றை ஆபத்திலிருந்து மீட்க முடியும்.

“மயக்க மருந்தைச் செலுத்திய பிறகுதான் அனைத்தும் நடக்கிறது. அதன்பிறகு எவ்வித கட்டுப்பாடுமில்லை, அடுத்து என்ன நடக்கும் என்பது எங்கள் கைகளில் இல்லை,” என்று டாக்டர் மார்டின் ஹவ்லினா கூறினார். அவர் வென்கூவர் கடல் உயிரின காப்பக அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆவார்.

கடலில் விலங்குகளுக்கு ஏற்படும் இதுபோன்ற சிக்கல்களுக்கு மனிதர்களே காரணம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர். கடலில் வீசப்படும் அல்லது மனிதர்கள் பயன்படுத்தும் பல பொருள்களால் பல உயிரினங்கள் இறந்து விடுகின்றன.

ஸ்டெலர் சீ லயன்ஸ் வகை கடல் சிங்கங்கள் பூமியின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றன. வட கலிஃபோர்னியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அவ்விலங்கினம் அதிகம் காணப்படுகிறது. ஆண் கடல்சிங்கம் 1,133 கிலோகிராம் எடைவரை மிகவும் பெரியதாக வளரக்கூடியது.

குறிப்புச் சொற்கள்