சிரம்பான்: அதிகாரத் தரப்பினரிடமிருந்து வந்த வாய்மொழி உத்தரவின்படி, நெகிரி செம்பிலான் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ‘விஸ்மா நெகிரி’ கட்டடத்திற்குள் நுழைவதற்கும், தங்கள் கூட்டங்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் இஸ்மாயில் லாசிம் தெரிவித்தார்.
புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதையும் தடுக்கிறது என்று அவர் கூறினார்.
“நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விஸ்மா நெகிரிக்குள் நுழையவோ, தங்கள் பணிகளை மேற்கொள்ளவோ அல்லது கூட்டங்களை நடத்தவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று வியாழக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
“நீதிமன்ற உத்தரவு ஏதுமில்லாததால், இது முறையானது அல்ல என்று நான் கருதுகிறேன்,” என்றார் அவர்.
தாம் தனிப்பட்ட முறையில் தடுக்கப்படவில்லை என்று கூறிய இஸ்மாயில், அந்த உத்தரவைப் பிறப்பித்த அதிகார அமைப்பின் பெயரை வெளியிட மறுத்ததுடன், தமது நிர்வாகக் குழு தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் வலியுறுத்தினார்.
தாம் தடுக்கப்படவில்லை என்றும், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் அதிகாரபூர்வ வாகனங்களைத் திருப்பித் தருமாறு அறிவுறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
நிர்வாகக் குழுவின் நிலை குறித்த சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அந்த உத்தரவின் அடிப்படை, வரம்பு உள்ளிட்ட அம்சங்களை அதிகாரிகள் அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இஸ்மாயில் வலியுறுத்தினார்.
“அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதைத் தடுக்காத வகையில், முறையான வழிமுறைகளின் மூலமே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
“இந்தச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கு மாநில அரசுக்கும் சட்ட நடைமுறைக்கும் உரிய வாய்ப்பை அளிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று முதல்வர் அவர் கூறினார்.
வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள், பொதுமக்களுக்கான உதவிகள் ஆகியவை குறித்த விவாதங்கள் இந்தக் கூட்டங்களில் இடம்பெறுவதால், நிர்வாகக் குழுவைக் கூடுவதிலிருந்து தடுப்பது என்பது மக்களின் உரிமைகளை மறுப்பதற்குச் சமம் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் சட்டபூர்வமான அரசாங்கமாக இருக்கும் நிலையில், நியாயமான காரணங்களோ அல்லது நீதிமன்ற உத்தரவோ இன்றி இது தடுத்து நிறுத்தப்பட்டால், அது மக்களின் உரிமைகளை மறுப்பதாகும்,” என்று அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 38(5)ன் கீழ், எந்தவொரு நிர்வாகக் குழு உறுப்பினரின் பதவியையும் நீக்குவது குறித்துத் தம்மிடம் ஆலோசிக்கப்படவோ அல்லது அது குறித்து தமக்கு அறிவுறுத்தப்படவோ இல்லை என்று இஸ்மாயில் வலியுறுத்திக் கூறினார்.
