ஜோகூர்: கடைகளில் விற்கப்படும் பொருள்களில் விலை ஒட்டு வில்லைகள் இல்லாத காரணத்தால் ஜோகூர் வியாபாரிகள் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு நடத்திய அமலாக்கச் சோதனையில் வியாபாரிகள் சிக்கினர். அவர்களுக்கு 675,000 ரிங்கிட் (214,000 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
“பொருள்களில் விலை ஒட்டு வில்லைகள் இல்லாததற்காக 1,671 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு மட்டும் 561,050 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சின் ஜோகூர் பிரிவு இயக்குநர் தெரிவித்தார்.
“சரியான எடை இல்லாமல் பொருள்களை விற்றது தொடர்பாக 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக 115,200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு வெளிப்படையான விலையில் பொருள்களை விற்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சு கூறியது.
இப்போதைக்கு தாமான் பெர்லிங் பொதுச் சந்தையில் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர். பின்னர் அது கட்டம் கட்டமாக மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

