பாகிஸ்தான் வன்முறையில் 32 பேர் மரணம்; 300 குடும்பங்கள் வேறிடங்களில் தஞ்சம்

1 mins read
94c74807-74e2-42ba-9c5f-0c1441a203ee
தாக்குதலைக் கண்டித்து சனிக்கிழமை கராச்சி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஷியா முஸ்லிம்கள். - படம்: இபிஏ

பெஷாவர்: பாகிஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த மோதலில் 32 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் வடமேற்குப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 300 குடும்பங்கள் வெளியேறிவிட்டன.

சன்னி, சியா முஸ்லிம் பிரிவினருக்கு இடையே சனிக்கிழமை (நவம்பர் 23) அந்த மோதல் நிகழ்ந்தது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் மலைத் தொடர் நிறைந்த கைபர் பக்துங்குவா மாநிலத்தில் அவ்விரு பிரிவையும் சேர்ந்தோர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

“மாநிலத்தின் குர்ராம் மாவட்டத்தில் இருந்து ஏற்கெனவே 300 குடும்பங்கள் வரை வெளியேறி ஹாங்கு, பெஷாவர் பகுதிகளில் தஞ்சம் புகுந்துவிட்டன.

“மேலும் சில குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறத் தயாராகி வருகின்றன,” என்று மூத்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கொல்லப்பட்ட 32 பேரில் 14 பேர் சன்னி பிரிவையும் 18 பேர் ஷியா பிரிவையும் சேர்ந்தவர்கள் என்று மற்றொரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இரு பிரினருக்கு இடையிலான மோதல் பல்வேறு பகுதிகளில் நீடித்து வருவதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாள்களுக்கு முன்னர், காவல்துறை பாதுகாப்புடன் ஷியா முஸ்லிம்கள் அணிவகுத்துச் சென்றபோது துப்பாக்கிக்காரர்கள் தாக்கியதில் 43 பேர் உயிரிழந்த நிலையில் புதிய வன்முறை வெடித்துள்ளது.

மேலும், குர்ராம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் இரு முஸ்லிம் பிரிவினருக்கு இடையே நிலத் தகராறு நடந்தது.

குறிப்புச் சொற்கள்