பெய்ஜிங்: பிரபலக் காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அளவே இல்லை.
ரொனால்டோவைப் பார்ப்பதற்காக சீனாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு ஏழு மாதங்கள் சைக்கிளோட்டினார் சீனாவைச் சேர்ந்த 24 வயது ஆடவர்.
‘கொங்’ என்ற அந்த ஆடவர், கடந்த மார்ச் 18ஆம் தேதி தமது வீட்டிலிருந்து புறப்பட்டார். இறுதியில் அக்டோபர் 20ஆம் தேதி அவர் ‘அல் நாசர்’ காற்பந்து மன்றத்தின் முன்னால் ரொனால்டோவைச் சந்தித்தார்.
தமது கனவை நனவாக்க, கொங் முதலில் வடக்கு நோக்கி பெய்ஜிங் சென்றார். அதன் பிறகு, அவர் ஸின்ஜியாங்கிலிருந்து கஸாக்ஸ்தான் சென்றார். ஜார்ஜியா, ஈரான், கத்தார் உள்ளிட்ட ஆறு நாடுகளைக் கடந்து, சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதை அவர் சென்றடைந்தார். ரொனால்டோ தற்போது அங்குதான் தங்கியுள்ளார்.
நீண்டநாள் பயணத்தின்போது, கொங் பல சவால்களைச் சந்தித்தார். உள்ளூர்வாசிகளிடம் பேசுவது, வெவ்வேறு நாடுகளில் உணவருந்துவது, நீண்ட நாள்கள் சைக்கிளோட்டியதால் ஏற்பட்ட சோர்வு ஆகியவை அவற்றுள் அடங்கும்.
முன்னதாக, காயமடைந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் ரொனால்டோ சீனாவுக்கு மேற்கொள்ளவேண்டிய பயணத்தை ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து, ரியாதுக்குச் செல்ல முடிவெடுத்தார் கொங்.
அவர் தமது சைக்கிளில் 13,000 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார். ‘அல் நாசர்’ காற்பந்து ஊழியர்கள் அவருடன் ஒத்துழைத்து, ஒரு நிமிட ரசிகர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உறுதி அளித்தனர்.
ரொனால்டோ தம்முடன் கைக்குலுக்கி, தம்மைக் கட்டி அணைத்து, ‘அல் நாசர்’ காற்பந்துச் சட்டையில் கையெழுத்திட்டதாக கொங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கொங் அடுத்து ரொனால்டோவின் பிறப்பிடமான போர்ச்சுகலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.