கோலாலம்பூர்: 2006ல் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான இரண்டு மெய்க்காப்பாளர்களால் கொலை செய்யப்பட்ட மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபூவின் வழக்கை மேலும் விசாரிக்கக் கோரி அவரின் தந்தை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அல்தான்துயாவைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர்களில் ஒருவரால் 2019ல் மரண தண்டனையிலிருந்து விடுபட அளித்த வாக்குமூலத்தை மலேசிய அதிகாரிகள் விசாரிக்கக் கோரி திரு ஷாரிபூ செட்டேவ், 76, நீதித்துறை மறுஆய்வுக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஷாரிபூவின் வழக்கறிஞர் சங்கீத் கோர் டியோ வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
28 வயது அல்தான்துயாவின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு ரகசிய சேவைக் காவல்காரர்களில் ஒருவரான அஸிலா ஹட்ரி அளித்த அந்த வாக்குமூலத்தில், அல்தான்துயாவைக் கொல்லுமாறு நஜிப் உத்தரவிட்டதாக கூறினார்.
அல்தான்துயாவின் மரணத்தில் தமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நஜிப் தொடர்ந்து மறுத்துள்ளார். அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் அவர் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
2024ல் அஸிலாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
அஸிலா தமது விண்ணப்பத்தை ஆதரிக்க, தாம் அளித்த வாக்குமூலத்தைப் பயன்படுத்தினார். அதன் உள்ளடக்கங்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர் மறுக்கவில்லை என்று வழக்கறிஞர் சங்கீத் கூறினார்.
நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பம் குறித்த விசாரணை செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என்று வழக்கறிஞர் சங்கீத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கொலைக்கான காரணம் குறித்து கேள்விகளை எழுப்பி, மலேசியாவையே உலுக்கிய ஒரு கொலை வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கும்.

