விமானச் சிப்பந்திகளும் கடுமையாகச் சோதிக்கப்படுவார்கள்: தாய்லாந்து

விமானச் சிப்பந்திகளும் கடுமையாகச் சோதிக்கப்படுவார்கள்: தாய்லாந்து

1 mins read
4e1a9415-7f1c-49e2-b8a6-89a73b45f857
விமானப் பயணிகளைச் சோதனை செய்வதுபோலவே விமானச் சிப்பந்திகளும் சோதனை செய்யப்படுவார்கள் என்று தாய்லாந்தின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்: த நே‌‌ஷன்

பேங்காக்: விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கத் தாய்லாந்து புதிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

விமானப் பயணிகளைச் சோதனை செய்வதுபோலவே விமானச் சிப்பந்திகளும் சோதனை செய்யப்படுவார்கள் என்று தாய்லாந்தின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துலக விமானங்களில் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான தீர்வுகளை உருவாக்கவும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தாய்லாந்து பொது விமானப் போக்குவரத்து ஆணையத்திற்குத் துணைப் போக்குவரத்து அமைச்சர் பத்ரபோங் பத்ரபிரசித் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில், தாய் ஏர்வேஸ் ஊழியர் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விமானப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்த தாய் ஏர்வேஸ், தாய்லாந்து விமான நிலையங்கள் நிறுவனம், சுங்கத்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம், பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுக்குப் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே, தாய் ஏர்வேஸ் நிறுவனம், விமானப் பயணத்திற்கு முன் சிப்பந்திகளையும் அவர்களின் உடைமைகளையும் சோதிப்பதைக் கடுமையாக்கியுள்ளது.

விதிமுறைகளை மீறுபவர்கள் அல்லது அனுமதி இல்லாமல் மற்றவர்களிடமிருந்து பொருள்களைப் பெற்றுக்கொள்பவர்கள்மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து விமான நிறுவனங்களும் இதே தரநிலைகளைப் பின்பற்றுமாறு போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

விமான நிறுவனங்கள் விதிகளைப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கூர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய நடத்தைகளைக் கண்காணிக்கவும் அபாயங்களைக் கண்டறியும் திறனை மேம்படுத்படுத்தவும் அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துவிமானப் போக்குவரத்துபோதைப் பொருள்