பெர்த்: பெர்த் - ரோம் இடையிலான 17 மணி நேரக் குவான்டாஸ் விமானப் பயணத்தின்போது மூட்டைப்பூச்சி கடியால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தில் அக்டோபர் 9ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 10ஆம் தேதி ரோமிலிருந்து பெர்த் செல்லவிருந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டு, விமானத்தில் கிருமிநாசினி தெளித்து, தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிக்கன வகுப்பின் சில இருக்கைகளில் மூட்டைப்பூச்சிப் பிரச்சினை கண்டறியப்பட்டதாகக் கூறிய குவான்டாஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்கும் வசதியும், 48 மணி நேரத்திற்குள் மாற்று விமானப் பதிவுகளும் செய்து தரப்பட்டன. பயணத்தின்போது ஒவ்வாமை நிவாரண மருந்துகள் வழங்கப்பட்டன. ஒருகட்டத்தில் மருந்த தீர்ந்துபோனதாக செய்தித் தாள்கள் குறிப்பிட்டன.
சிங்கப்பூரின் ‘ஹெல்த்பப்’ தகவல்படி, இரவில் அதிகம் செயல்படும் மூட்டைப்பூச்சிகள், மனிதர்களின் ரத்தத்தைக் குடித்து வாழ்பவை. இவற்றின் கடி நோய்களைப் பரப்பாது என்றாலும், உமிழ்நீரில் உள்ள வேதிப்பொருள்களால் கடுமையான அரிப்பையும் தடிப்புகளையும் ஏற்படுத்தும்.
இப்பூச்சிகள் உடல் வெப்பம், ரத்தம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றால் ஈர்க்கப்படுகின்றன. நியூயார்க்கின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்கூட இவை காணப்படுகின்றன.
