சமூக ஊடகப் பயன்பாட்டிலிருந்து பிள்ளைகளைத் தடை செய்ய ஃபுளோரிடாவுக்கு ஒப்புதல்

சமூக ஊடகப் பயன்பாட்டிலிருந்து பிள்ளைகளைத் தடை செய்ய ஃபுளோரிடாவுக்கு ஒப்புதல்

படம்: ராய்ட்டர்ஸ்

15 Oct 2026 - 2:38 pm

2 mins read

அட்லன்டா: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலிருந்து 14 வயதுக்குக் கீழ் உள்ளோரைத் தடைசெய்யும் சட்டத்தை அமல்படுத்த மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதை முன்னிட்டு, ஃபுளோரிடாவில் 14 வயது நிரம்பாதோர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னேப்சேட் போன்ற சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த முடியாது.

அத்தகைய முடிவு, அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பேச்சுரிமையை மீறுவதாகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறியபோதும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒருமித்த மனத்துடன் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

ஃபுளோரிடாவில் ஒப்புதல் பெற்ற சட்டம், அடுத்தடுத்த காணொளிகளை முன்வைப்பது, திரையைத் தொடர்ந்து வருடிக்கொண்டே இருப்பது போன்ற அம்சங்கள் கொண்ட சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கும் கணக்குகளை உருவாக்குவதற்கும் 14 வயதுக்குக் கீழ் உள்ளோருக்குத் தடை விதிக்கிறது.

புதிய சட்டத்தைத் தடுக்கும் நோக்கில் 2024ஆம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவனக் குழுக்களான நெட்சாய்ஸ் அமைப்பும் கணினி, தொடர்புகள் துறைச் சங்கமும் வழக்கு தொடுத்தன.

“ஃபுளோரிடா மக்களின் கருத்துச் சுதந்திர உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், தங்களது குடும்பங்களுக்கான முடிவுகளை எடுப்பதில் பெற்றோரே முதன்மையாகச் செயல்படுவதையும் உறுதிசெய்வதற்கான போராட்டத்தைத் தொடர்வோம்,” என்றார் நெட்சாய்ஸ் வழக்கு நிலையத்தின் இயக்குநர் பால் டாஸ்க்.

இளையர்களின் மனநலனில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த பரவலான விவாதங்களுக்கு இடையில், குழந்தைகளுக்கான சமூக ஊடக பயன்பாட்டை முறைப்படுத்தும் சட்டத்தை இயற்றிய முதல் சில மாநிலங்களில் ஃபுளோரிடாவும் ஒன்று.

இதற்கிடையே, ஸ்னேப் செயலிக்கு எதிரான ஃபுளோரிடாவின் வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், சட்டத்திற்குப் பணியுமாறு ஸ்னேப்பிற்கு உத்தரவிடக் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில அரசு சமர்ப்பித்த கோரிக்கையை நிராகரித்தது. மேலும், அச்சட்டம் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அமையக்கூடும் என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்