ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பி. ராமசாமிமீது புதன்கிழமை (மே 14) ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பினாங்கில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்துக்குத் திரு ராமசாமி திங்கட்கிழமை (மே 12) சென்றதாக மலேசிய ஐக்கிய உரிமைக் கட்சி தெரிவித்தது.
திரு ராமசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடும் என்று அங்கு அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக அக்கட்சி கூறியது.
அக்கட்சியின் தலைவராகத் திரு ராமசாமி பதவி வகிக்கிறார்.
“2017ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட தங்க ரதம், பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நல்வாழ்வு உதவித்தொகை ஆகியவற்றுடன் இந்தக் குற்றச்சாட்டு தொடர்புடையதாக இருக்கும் என நம்புகிறோம்.
“திரு ராமசாமியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முற்படுவோர் இந்த விவகாரங்களைத் தொடர்ந்து பலமுறை கையில் எடுத்துள்ளனர்,” என்று மலேசிய ஐக்கிய உரிமைக் கட்சியின் செயலாளர் சதீஷ் முனியாண்டி தெரிவித்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் திரு ராமசாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.