பட்டர்வொர்த்: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடக்கவுள்ள சமய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி. ராமசாமியின் கடப்பிதழ் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதிமுதல் 8ஆம் தேதிவரை திரு ராமசாமி தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தெரிவித்தார்.
“தமிழ்நாட்டின் வெள்ளக்கோவிலில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சியில் திரு ராமசாமி தம் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளவிருக்கிறார். அவர் தமது கடப்பிதழை ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை 8 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்,” என்று திரு ஷம்ஷேர் கூறினார்.
பயணம் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விதித்துள்ள தடையை அகற்றக் கோரி திரு ராமசாமி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தடையைத் தான் விதிக்கவில்லை என்பதால் அதனைத் தன்னால் அகற்ற முடியாது என்று அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸுல்ஹஸ்மி அப்துல்லா தெரிவித்துவிட்டார்.
‘உரிமை’ அமைப்பின் தலைவரான திரு ராமசாமி, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் 850,000 ரிங்கிட் (S$255,700) நிதி தொடர்பில் 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அவை குறித்து விசாரணை கோரியுள்ள அவர், தற்போது 78,000 ரிங்கிட் பிணையில் வெளியில் இருக்கிறார்.
அவர்மீதான வழக்கு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.