சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், நாட்டுக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றபோது அதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் ஹான் டக் சூ எதிர்நோக்குகிறார்.
அரசாங்க சிறப்பு வழக்கறிஞர் அவருக்கு 15ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும்படி முன்னுரைத்துள்ளார். ராணுவ ஆட்சிக்கு எதிரான குற்றவியல் சட்டப்படி கீழ்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் முதல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹான் ஆவார்.
முன்னாள் அதிபரோடு, நாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் பலருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு முன்னோடியாக அமையும். முன்னாள் அதிபர் யூனுக்கு அடுத்த ஆண்டில் தீர்ப்பு வழங்கப்படும்.
“அவருக்கு வழங்கப்படும் கடுமையான தீர்ப்பு, இதுபோன்ற குற்றங்கள் வரலாற்றில் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு உதவும்” என்றார் வழக்கறிஞர்களில் ஒருவர்.
முன்னாள் அதிபர் ராணுவ ஆட்சியை அமலாக்க முயன்றபோது பிரதமராக இருந்த திரு ஹான், நாட்டின் இரண்டாம் நிலை அதிகாரத்தைப் பெற்றிருந்தும் அதனைத் தடுக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சியைப் பற்றி ஒட்டுமொத்த விவரங்களை தான் அறிந்திருக்கவில்லை என்று திரு ஹான் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பொருளாதாரமும் வெளியுறவுத் துறையும் நம்பகத்தன்மையை இழந்துவிடும் என்று அதிபர் மாளிகையில் அப்போது தாம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
திரு ஹான் ஐந்து அதிபர்களின்கீழ் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப வல்லுநர். திரு யூன் மீது குற்றம் சுமத்தப்பட்ட பிறகு திரு ஹான் தற்காலிக அதிபராக பணியமர்த்தப்பட்டார்.

