100 மில்லியன் பீப்பாய் எண்ணெய், டீசல் இருப்பு விடுவிப்பு: ஜி7 நாடுகள் முடிவு

எண்ணெய் விலை குறைய வாய்ப்பு

100 மில்லியன் பீப்பாய் எண்ணெய், டீசல் இருப்பு விடுவிப்பு: ஜி7 நாடுகள் முடிவு

படம்: இபிஏ

03 Oct 2026 - 9:40 am

2 mins read

வாஷிங்டன்: எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தவும் சந்தை நெருக்கடியைத் தணிக்கவும், 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய், டீசலை அவசரகால இருப்பிலிருந்து விற்பனைக்குவிட ஜி7 நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய வளர்ந்த நாடுகளைக் கொண்ட ஜி7 கூட்டமைப்பு, அனைத்துலக எரிசக்தி முகமையின் ஒருங்கிணைப்பில் அடுத்த நான்கு மாதங்களில் இருப்பை விடுவிக்கும்.

முதல் 20 நாள்களில் பெருமளவிலான டீசல் சந்தைக்குக் கொண்டுவரப்படும்.

ஈரான் போர் பதற்றத்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு US$100ஐ தாண்டியுள்ள நிலையில், போக்குவரத்து, விவசாயத் துறைகளைப் பெரிதும் பாதித்துள்ள டீசல் தட்டுப்பாட்டைக் குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நவம்பர் இடைக்காலத் தேர்தலை ஒட்டி உள்நாட்டுப் பயனீட்டாளர் காக்க அந்நாட்டு டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்போவதாக எச்சரித்திருந்தார். இதனால் ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது.

எனினும், வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 2) காணொளி வாயிலாக நடைபெற்ற ஜி7 தலைவர்களின் அவசரக் கூட்டத்திற்குப் பிறகு, உறுப்பு நாடுகள் பரஸ்பரம் எரிபொருள் ஏற்றுமதிக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏற்றுமதித் தடை எண்ணம் முற்றிலும் கைவிடப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.

உலகளவில் ரஷ்யாவின் டீசல் ஏற்றுமதித் தடை, ஈரான் போர் காரணமாகக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பிரிட்டன் போன்ற இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ள நாடுகளுக்கு ஜி7 நாடுகளின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், சவூதி அரேபியா, ஏமன் இடையேயான புதிய தாக்குதல் செய்திகளால் எண்ணெய் விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க சுத்திகரிப்பு ஆலைகளின் பராமரிப்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் டீசல் உற்பத்தியை அதிகப்படுத்தவும் ஜி7 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஜி-7அமெரிக்காகச்சா எண்ணெய்விலைடீசல்