காஸா போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்படவில்லை: கத்தார் பிரதமர்

2 mins read
bdb9c971-2714-4bbc-b883-20a81bbb564d
கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி. தலைநகர் தோஹாவில் சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கிய ஆண்டுதோறும் நடக்கும் அரசதந்திர மாநாட்டில் கலந்துகொண்டார். - படம்: ஏஎஃப்பி

தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது.

அந்த 23ஆம் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் ஜசிம் அல் தானி, அமெரிக்க ஆதரவோடு நடத்தப்படும் காஸா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியக் கட்டத்தில் உள்ளன என்றார். ஆயினும் போர்நிறுத்த உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தையில் சமரசம் செய்யும் முக்கிய நாடாக உள்ள கத்தார், அதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல முயன்றுவருவதாக பிரதமர் கூறினார்.

“நாங்கள் முக்கிய கட்டத்தில் உள்ளோம். தற்போதைய நிலை மிகவும் குறுகிய போர்நிறுத்தம் மட்டுமே,” என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடப்பில் இருக்கும் இருதரப்பு அமைதியை மேற்கோள் காட்டினார்.

“தற்போதுள்ள அமைதி, போர்நிறுத்தமாகாது. அனைத்து இஸ்ரேலியப் படைகளும் முழுமையாக காஸாவைவிட்டு வெளியேறி, மக்கள் அங்கு வழக்கமாக நடமாடும் நிலை ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும். இன்றைய நிலை அப்படி இல்லை,” என்றார் திரு ஷேக் முஹம்மது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின்படி, இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் நடக்கும் போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

காஸாவில் ‘அனைத்துலக அமைதி மன்றக்’ கண்காணிப்பில், உலகளாவிய பாதுகாப்புப் படையின் உதவியுடன் ஒரு இடைக்கால பாலஸ்தீன ‘தொழில்நுட்ப’ அரசாங்கத்தை நிறுவுவது திட்டத்தில் ஒரு முக்கிய அங்கமாகும்.

அனைத்துலக பாதுகாப்புப் படையின் உள்ளமைப்பையும் கடமைகளையும் உறுதிசெய்வது மிகவும் சவாலாக உள்ளது.

கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4) இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தின் தலைநகர் கைரோவில் சமரசப் பேராளர்களுடன் பிணைக் கைதி விடுதலைபற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்படி காஸாவில் உள்ள கடைசி பிணைக் கைதி விடுதலை செய்யப்பட்டால், அதிபர் டிரம்பின் முதற்கட்ட திட்டம் நிறைவடையும்.

மிகவும் நிலையற்ற போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை 20 பிணைக்கைதிகளை உயிருடனும் 27 இறந்த சடலங்களையும் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்த 2,000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் வன்முறை குறைந்துள்ளது. ஆயினும் காஸாவில் ஹமாஸ் உள்கட்டமைப்புகள் என்று கூறி இஸ்ரேல் தொடர்ந்து கட்டடங்களைத் தகர்த்துவருகிறது. அமெரிக்க அமைதித் திட்டத்தை மீறியதாக அவ்வப்போது இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிவருகின்றன.

குறிப்புச் சொற்கள்