ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் உள்ள சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 13 ஊழியர்களைத் தேடும் பணியை மீட்புப் படையினர் வியாழக்கிழமை (நவம்பர் 26) மீண்டும் தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போகோர் பகுதியில் உள்ள சுரங்கத்திற்குள் கடந்த நவம்பர் 23ஆம் தேதி 26 ஊழியர்கள் சென்றனர்.
கனமழையால் சுரங்கத்தில் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் 100 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்டனர்.
உயிரிழந்த 13 பேரில் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மேற்கு ஜாவா காவல்துறை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
சுரங்கப் பாதை குறுகலாகவும் இருட்டாகவும் வழுக்கிவிடும் நிலையிலும் இருப்பதால் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது.
மீட்புப் படையினர் கயிறுகளைப் பயன்படுத்தி இரு சுரங்கப் பாதைகளில் தேடி வருகின்றனர். ஆனால், 100 மீட்டர் ஆழம் இப்பணியைச் சிக்கலாக்கியுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோதச் சுரங்கங்களைக் கண்காணிப்பது அதிகாரிகளுக்குச் சவாலாக உள்ளது. இதனால் தொடர் விபத்துகள் நிகழ்கின்றன.
கடந்த ஜனவரியிலும் இதே பகுதியில் நச்சு வாயு தாக்கிப் பல சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தமது செயல்பாடுகளுக்கு உட்பட்ட சுரங்கத்தில் நிகழவில்லை என அரசு நிறுவனமான அன்டாம் தெரிவித்துள்ளது.
