தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாத்தா கைப்பேசியில் மூழ்கியிருக்க பேரன் ஆற்றுநீரில் மூழ்கிய சோகம்

1 mins read
ebf26232-10d4-4871-afc2-95dc52426068
பேரன் பலமுறை தன்னோடு வரக் கேட்டும் தாத்தா அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்ததாக சிறுவனின் அம்மா கூறினார். - படம்: இணையம்

நம்மில் பலர் ஓய்வாக இருக்கும்போது கைப்பேசியை உடனே எடுத்துப் பார்க்கும் பழக்கமுடையவர்கள்.

அவ்வாறு ஒருவர் செய்ததனால் அவரின் மூன்று வயதுப் பேரனை இழக்க நேரிட்டது.

‘டிக்டாக்’ போல் இயங்கும் சீனாவின் ‘டோயின்’ செயலியைத் தமது கைப்பேசியில் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு தாத்தா, தம்முடைய பேரன் ஆற்றுப் பக்கம் சென்றதைக்கூட கவனிக்கவில்லை.

தொடக்கத்தில் தாத்தாவின் அருகில் சிறுவன் தனது விளையாட்டுப் பொருளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அச்சிறுவன் எழுந்து தாத்தாவிடம் சென்றான்.

விளையாட்டுப் பொருளைக் கழுவ தன்னோடு வர முடியுமா என்று சிறுவன் தாத்தாவிடம் பலமுறை கேட்டான்.

இருப்பினும், கைப்பேசித் திரையையே பார்த்துக்கொண்டிருந்த தாத்தா பதில் ஏதும் கூறவில்லை.

பின்னர், தாத்தா பதில் அளிக்காத நிலையில் அந்தச் சிறுவன் ஆற்றை நோக்கிச் சென்றான்.

ஆற்றுக்குச் சென்றவன் வழுக்கி நீரில் விழுந்து மூழ்கிவிட்டான்.

தன் மகனின் இறப்பால் உருகுலைந்து போன அவனின் தாயார், தன்னுடைய மாமனார் அதாவது சிறுவனின் தாத்தா கவனக்குறைவாக இருந்ததால்தான் இது நடந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

மகன் மூழ்குவதற்குமுன் நடந்ததைக் காட்டும் காணொளியையும் அந்தத் தாயார் இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.

இதற்கிடையே, அந்நேரத்தில் தன்னிலை இழந்த நிலையில் தாம் இருந்ததாக அந்தத் தாத்தா கூறியுள்ளார். அதனால், பேரன் தம்மைக் கூப்பிட்டதுகூட காதில் விழவில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்