கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த ஜனநாயகச் செயல் கட்சியின் மத்திய செயற்குழு தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறுகிறது.
இந்நிலையில், இத்தேர்தலிலிருந்து விலகப் போவதில்லை என்று ஜனநாயகச் செயல் கட்சியின் தேசியத் தலைவர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக பரவி வரும் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பகான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு லிம் சனிக்கிழமை (மார்ச் 15) பதிவிட்டார்.
“இத்தகைய பொய்ச் செய்திகள் எங்கிருந்து வருகின்றன என எனக்குத் தெரியவில்லை. நான் தேர்தலிலிருந்து விலகமாட்டேன். எனது எதிர்காலத்தை ஜனநாயகச் செயல் கட்சி உறுப்பினர்கள் முடிவெடுப்பர்,” என்று திரு லிம் சீனமொழியில் பதிவிட்டார்.
தமக்கு ஆதரவு வழங்கிய கட்சி உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“என் மீது வைத்திருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் கட்சி மாநாட்டில் சந்திக்கிறேன்,” என்றார் திரு லிம்.
ஜனநாயகச் செயற்குழுத் தேர்தல் மார்ச் 16ஆம் தேதியன்று ஷா அலாமில் உள்ள ஐடில் மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
மத்திய செயற்குழு, ஜனநாயகச் செயல் கட்சியின் ஆக உயரிய பிரிவாகும்.
தொடர்புடைய செய்திகள்
அதில் உள்ள 30 இடங்களுக்கு 70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெறுவர்கள் 2025ஆம் ஆண்டிலிருந்து 2028ஆம் ஆண்டு வரை அக்கட்சியை வழிநடத்துவர்.
இதற்கிடையே, ஜனநாயகச் செயல் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுடன் மத்திய செயற்குழுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஜனநாயகச் செயல் கட்சியின் 1,650 கிளைகளைச் சேர்ந்த 4,203 பேராளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், ஸ்டீவன் சிம், கோபிந்த் சிங் டியோ, ராம்கர்ப்பால் சிங், ஙா கோர் மிங், சாவ் கோன் யாவ், சோங் சியெங் ஜென் உட்பட கட்சியின் பல மூத்த தலைவர்கள் தேர்தலில் களமிறங்குகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் 30 செயற்குழு உறுப்பினர்களுக்கு மேலும் பத்து உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது.
அதையடுத்து, கட்சியின் தலைமைச் செயலாளர் உட்பட தலைமைப் பதவி வகிக்கும் மற்றவர்களையும் செயற்குழு தேர்ந்தெடுக்கும்.

