பென்சில்வேனியாவில் எண்மரைக் கொன்ற துப்பாக்கிக்காரன்

பென்சில்வேனியாவில் எண்மரைக் கொன்ற துப்பாக்கிக்காரன்

படம்: ஏஎஃப்பி

11 Oct 2026 - 7:03 pm

2 mins read

ஹெரிஸ்பர்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஈரி நகரில் 45 வயது ஆடவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கர்ப்பிணிப் பெண், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) மாலை நடைபெற்ற தாக்குதல் குறித்து விரிவான தகவல்களை அவர்கள் வெளியிட்டனர். சம்பவ இடத்தைக் காவல்துறையினர் அடைவதற்கு முன்னரே, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஈரி நகரின் காவல்துறைத் தலைவர் ரிக் லோரா தெரிவித்தார்.

“சில சம்பவங்கள் நிகழ்ந்த இடத்தை விட்டு அகன்ற பிறகும், அவை நீண்டகாலத்துக்கு நினைவில் இருக்கும். இதுவும் அத்தகைய ஒரு துயரச் சம்பவம்,” என்று அவர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கான காரணத்தைக் காவல்துறையினர் இன்னும் கண்டறியவில்லை. உயிரிழந்த ஒன்பது பேரில் எட்டுப் பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் குடும்ப நண்பர் என்றும் லோரா குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வீட்டிற்குள் நுழைந்த பிறகு, அங்கிருந்து வெளியே வந்து வீட்டின் அருகே பதற்றத்துடன் உதவி கோரி அங்கும் இங்குமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்கள் இருவரைச் சுட்டுக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

காவல்துறையினர் ஒரு கொடூரமான சம்பவத்தைத் துணிச்சலுடனும் நிபுணத்துவத்துடனும் கையாண்டதாக ஈரி நகரத்தின் மேயர் டாரியா டெல்வின் பாராட்டினார்.

“அவர்களும் இந்தச் சமூகத்தின் உறுப்பினர்களே. சம்பவத்தின் சுமையை அவர்களும் சுமப்பார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷபிரோ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், மேயர் டெவ்லினுடன் பேசியதாகவும் இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஆளுநர் ஷபிரோ நீண்டகாலமாகப் பொதுத் துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டங்களை ஆதரித்து வருகிறார். 2024ஆம் ஆண்டில் உலகளாவிய பின்னணிப் பரிசோதனைகள் மற்றும் வரிசை எண்கள் இல்லாத, கண்டறிய முடியாத ‘கோஸ்ட் கன்ஸ்’ மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட துப்பாக்கிச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற அவர் மாநிலச் சட்டமன்றத்தை வலியுறுத்தினார்.

இருப்பினும், இவரது பல பரிந்துரைகள் சட்டமன்றத்தில் தேக்கமடைந்துள்ளன. துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் 2026ஆம் ஆண்டில் இதுவரை 400க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பென்சில்வேனியாவில் இதற்கு முன்னர் ஃபிலடெல்ஃபியாவில் கடந்த ஜூலை மாதம் இத்தகைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்