சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட சப்-அண்டார்டிக் வட்டாரத்தில் அமைந்துள்ள மேக்வாரி தீவில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் சனிக்கிழமையன்று (அக்டோபர் 17) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எச்5என்1 கிருமி, தொலைதூரப் பகுதியான அங்கு வாழும் அழிவின் விளிம்பில் உள்ள தெற்குப் பகுதி கடல் யானைகள், கடற்பறவைகள் ஆகியவற்றிடம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியத் தலைமை கால்நடை அதிகாரியான பெத் குக்சன் இது குறித்து கருத்துரைத்தார். மேக்வாரி தீவில் சேகரிக்கப்பட்ட ஒரு கடல் யானை மற்றும் ‘கெல்ப் கல்’ வகை கடற்பறவையின் மாதிரிப் பரிசோதனைகளில், எச்5என்1 கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தீவில் பதிவான முதல் ‘எச்5’ கிருமிச் சம்பவம் இதுவே என்றும் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியா கடந்த ஜூன் மாதத்தில் பறவைக் காய்ச்சல் பரவலைப் பதிவுசெய்த கடைசி கண்டமாக மாறியது. இருப்பினும், 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அந்நாட்டின் மற்றொரு சப்-அண்டார்டிக் வட்டாரமான ஹெர்ட் தீவில் இந்தக் கிருமி கண்டறியப்பட்டது. அங்கே பரவிய கிருமித்தொற்றால் 13,000க்கும் மேற்பட்ட குட்டி கடல் யானைகள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
