கோலாலம்பூர்: மலேசியா முழுவதும் புகைமூட்டம் தொடர்ந்து பரவி வருகிறது. நாட்டின் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் பாதியளவுக்குமேல் ‘சுகாதாரமற்ற’ நிலையைப் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டுச் சுற்றுச்சூழல் துறை வியாழக்கிழமை (அக்டோபர் 15) தெரிவித்தது.
மொத்தமுள்ள 68 நிலையங்களில் 34 நிலையங்கள் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 101 முதல் 200 வரை பதிவானது. ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேசியப் புகைமூட்ட நடவடிக்கைத் திட்டத்திற்கு ஏற்பப் பள்ளிகளை மூடுவதற்கான வழிகாட்டி விதிகளை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது. புதிய விதிகளின்படி, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100ஐ தாண்டும்போது வெளிப்புற நடவடிக்கைகள் நிறுத்தப்படும். குறியீடு 200ஐ தாண்டினால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும்.
முன்னதாக, குறியீடு 180ஐ தாண்டினாலோ, தொடர்ந்து மூன்று நாள்கள் 150க்குமேல் இருந்தாலோ பள்ளிகள் மூடப்படும் நிலை இருந்தது.
மாணவர்களின் கல்விப் பாதிப்பைக் குறைக்கவும், துல்லியமான நிலவரத்தைக் கையாளவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் கூறினார்.
எனினும், தங்கள் பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு அவர்களை வீட்டிலேயே வைத்திருக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
