மலேசியாவில் புகைமூட்டம்: சுவாசப் பிரச்சினை அதிகரிப்பு

மலேசியாவில் புகைமூட்டம்: சுவாசப் பிரச்சினை அதிகரிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

10 Oct 2026 - 10:06 pm

2 mins read

புத்ராஜெயா: மலேசியா முழுவதும் பரவிவரும் புகைமூட்டம் காரணமாக சுவாச உறுப்புகள் தொடர்பான தொற்றுகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10.43 விழுக்காடும் விழிவெண்படல அழற்சி பாதிப்புகள் 26.47 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளவில் உள்ள தேர்வுசெய்யப்பட்ட 78 பொது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட புகைமூட்டம் தொடர்பான நோய் கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது குறிப்பாகச் சிறுவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.

சனிக்கிழமை (அக்டோபர் 10) காலை 8 மணி நிலவரப்படி, நாட்டின் எட்டு மாநிலங்கள் மற்றும் இரண்டு கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள 32 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101 முதல் 200 வரையிலான ‘ஆரோக்கியமற்ற’ நிலையைப் பதிவு செய்துள்ளது.

இதன் காரணமாக, ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் நிலவும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடியோர், வெளிப்புறங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புகைமூட்டத்தின்போது கட்டாயமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால், என்95 போன்ற பொருத்தமான முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பார்வைத் தெளிவு குறைவாக இருக்கும்போது வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுற்றுப்புறத் துறையின் அதிகாரபூர்வ ஊடகங்கள் வழியாக காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டைத் தொடர்ந்து சோதித்து, அதற்கேற்பத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபுகைமூட்டம்நோய்