வெளிச்சத்தை மறைத்த புகைமூட்டம்; ஜோகூரில் ஐந்து விமானச் சேவைகள் பாதிப்பு

வெளிச்சத்தை மறைத்த புகைமூட்டம்; ஜோகூரில் ஐந்து விமானச் சேவைகள் பாதிப்பு

படம்: பெர்னாமா

08 Oct 2026 - 5:09 pm

1 mins read

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) காலையில் புகைமூட்டம் மோசமடைந்ததைத் தொடர்ந்து ஐந்து விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்துள்ளார்.

ஜோகூரில் உள்ள சினாய் அனைத்துலக விமான நிலைய வட்டாரத்தில், எதிரே இருப்பதைக் காண முடியாத அளவிற்கு புகைமூட்டம் இருந்ததால் விமானச் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

“பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப வெளிச்சம் இல்லாததால் விமானங்களால் தரையிறங்க இயலவில்லை. அதனால், பல விமானங்கள் கோலாலம்பூருக்குத் திருப்பிவிடப்பட்டன. ஒரு விமானம் மட்டும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்குத் திருப்பிடவிட்டதாகக் கேள்விப்பட்டேன்,” என்று திரு லோக் செய்தியாளர்களிடம் கூறினார்.

மொத்தம் ஐந்து விமானங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றால் தரையிறங்க இயலவில்லை. வேறு சில விமானங்களால் மேலே பறக்க இயலவில்லை. அதனால், தமது பயணத்திலும் தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து ஜோகூருக்க்கு காலை 7.15 மணிக்குப் புறப்பட வேண்டிய தமது விமானம் புகைமூட்டப் பிரச்சினையால் காலை 9 மணிக்குப் புறப்பட்டதாகத் திரு லோக் குறிப்பிட்டார்.

“சரியான நேரத்திற்குப் புறப்பட்டாலும் ஜோகூரில் தரையிறங்க இயலாமல் போகலாம் என்பதால் கோலாலம்பூரிலேயே காத்திருப்பது என்று முடிவெடுத்தோம். அதனால், ஒன்றேமுக்கால் மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு எனது விமானப் பயணம் தொடங்கியது,” என்றார் அவர்.

சினாய் விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் தங்களது விமானத்துக்காகக் காத்திருந்ததைத் தம்மால் காணமுடிந்ததாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்விமானச் சேவைஜோகூர்