மலேசியச் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மறைக்கும் புகைமூட்டம்

மலேசியச் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மறைக்கும் புகைமூட்டம்

படம்: இபிஏ

21 Oct 2026 - 10:02 am

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் நீடிக்கும் புகைமூட்ட நிலவரம் விமானப் பயணச் சேவைகளைப் பாதிப்பதோடு தென்கிழக்காசியப் பொருளியலின் முக்கியத் தூணாக இருக்கும் சுற்றுலாத் துறைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறப்படுகிறது.

அதனால், இந்த ஆண்டின் இந்தக் காலகட்டத்தில் மலேசிய சுற்றுப் பயண ஏற்பாட்டாளர்கள் குறைவான முன்பதிவுகளையே பெறுவதாகவும் சிலர் முன்பதிவுகளை ரத்து செய்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

காற்றுத் தரத்தைக் கண்காணிக்கும் ‘ஐக்யூஏர்’ நிறுவனம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) வெளியிட்ட தரவுகளின்படி, கோலாலம்பூர், சிங்கப்பூர், ஜகார்த்தா ஆகிய நகரங்கள் உலகின் கடுமையான காற்று மாசுபாடு நிலவும் பத்து பெரிய நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றன.

மோசமான காற்றுத் தரம் காரணமாக மலேசியாவின் சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன.

மலேசியச் சுற்றுப்பயண முகவர் சங்கத் தலைவர் மிண்ட் லியோங் கூறுகையில், நவம்பர் மாதத்திற்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு வருவதாகவும் குழு முன்பதிவுகள் குறைந்துள்ளதாகவும் வெளிநாட்டு சுற்றுப் பயண முகவர்கள் காற்றுத் தரம் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மலேசியா, தனது விரிவுபடுத்தப்பட்ட ‘மலேசியாவுக்கு வாருங்கள் 2026’ என்னும் பிரசாரத்தின் கீழ் இந்த ஆண்டு முழுவதும் 47 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

புகைமூட்டம் காரணமாக அதில் தற்போது தேக்கம் காணப்படுகிறது.

மலேசிய சுற்றுலாத் துறையின் தகவல்படி இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 28.8 மில்லியன் அனைத்துலகச் சுற்றுப் பயணிகள் மலேசியாவிற்கு வந்துள்ளனர்.

சுற்றுப் பயணத் துறையில் புகைமூட்டம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கேள்விகளுக்கு மலேசியச் சுற்றுப் பயண அமைச்சு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்