பேங்காக்கில் கொட்டிய கடும் மழை

பேங்காக்கில் கொட்டிய கடும் மழை

படம்: ராய்ட்டர்ஸ்

27 Sep 2026 - 5:17 pm

2 mins read

பேங்காக்: தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் பல நாள்கள் பெய்த கனமழையில் வீடுகளும் சாலைகளும் சேதமடைந்ததில் குடியிருப்பாளர்கள் பலர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 4,900 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட 52,000 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து பேங்காக்கில் பேரிடர் அவசரநிலை விடுக்கப்பட்டது.

கனத்த மழையால் பேங்காக் நகரம் வெள்ளக்காடானது.
கனத்த மழையால் பேங்காக் நகரம் வெள்ளக்காடானது. - படம்: ராய்ட்டர்ஸ்

இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதிவரை நகரின் ஒருசில பகுதிகளில் 330 மில்லிமீட்டர் வரை மழை பெய்ததாக வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

மழைக்குப் பழகிபோன தாய்லாந்தில் மழைக் காலத்தின் உச்சமாக செப்டம்பர் மாதம் இருக்கும். ஆனால் இவ்வாண்டு அது சற்று கடுமையாக இருந்ததாகப் பேங்காக் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

தங்கள் வீடு ஏறக்குறைய 30 மணி நேரத்துக்கு நீருக்கு அடியில் மூழ்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைவிட இம்முறை உயர்ந்த நீரின் அளவு அதிகமாக இருந்தது என்று சிலர் கூறினர்.

பேங்காக்கில் பெய்த கனத்த மழையால் வாகனங்கள் நீரில் மூழ்கின.
பேங்காக்கில் பெய்த கனத்த மழையால் வாகனங்கள் நீரில் மூழ்கின. - படம்: ராய்ட்டர்ஸ்

2011ஆம் ஆண்டு தாய்லாந்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 500க்கும் அதிகமானோர் மாண்டதுடன் மில்லியன்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

செப்டம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி பேங்காக்கின் கால்வாய்களில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்திருந்தது. நீர் வடிவதற்கு அதிகாரிகள் துரிதமாகச் செயல்படுவதாகத் தெரிவித்தனர்.

செப்டம்பர் 27ல் கூடுதல் மழை பெய்யும் என்றும் 28ஆம் தேதியிலிருந்து அது படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஒருசில பகுதிகளில் 330 மில்லிமீட்டர் வரை மழை பெய்தது.
ஒருசில பகுதிகளில் 330 மில்லிமீட்டர் வரை மழை பெய்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

பல்வேறு சாலைகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் பயணங்களைத் தவிர்க்கும்படியும் பேங்காக் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபன்ட் ஃபேஸ்புக் நேரலையில் அறிவுறுத்தினார்.

செப்டம்பர் 28ஆம் தேதிவரை பேங்காக்கில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெள்ளத்தால் பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுக்கு உதவி வருகிறது.

பேங்காக் செல்லும் மலேசியர்கள் கவனமாக இருக்கும்படியும் தூதரகம் அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்
மழைபேங்காக்சேதம்பாதிப்புவீடு