பாகிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்து; 22 பேர் மரணம்

பாகிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்து; 22 பேர் மரணம்

1 mins read
ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்
5b1de1a7-e955-45b0-a65f-2c81cc7295f0
பாகிஸ்தான் ராணுவத்தின் எம்ஐ-17 வகை ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் இருந்து புகை கிளம்பியது. காவல்துறையினரும் பொதுமக்களும் அங்கு கூடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

முஸாஃபராபாத்: பாகிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 10) அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 22 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அவர்களின் இறுதி ஊர்வலங்கள் வியாழக்கிழமை அங்கு நடத்தப்பட்டன. அப்பகுதியில் இயங்கும் ராணுவத் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் அந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Watch on YouTube

விபத்து குறித்து வெளியிடப்பட்ட காணொளியில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலிருந்து கரும்புகை கிளம்புவதைக் காணமுடிந்தது.

மேஜர் ஒருவர், கர்னல் இருவர், படைவீரர்கள் 19 பேர் ஆகியோர் உயிரிழந்தோரில் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வீரர்களுக்கும் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பாகிஸ்தானிய தேசியக் கொடி போர்த்தப்பட்ட அவர்களது சவப்பெட்டிகள் துப்பாக்கிப் படையினரால் ஏந்திச் செல்லப்பட்டன.

எம்ஐ-17 வகை ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாற்றால் கீழே விழுந்து அதில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்தனர் என்று பாகிஸ்தானிய ராணுவம் தெரிவித்தது.

தொழில்நுட்பப் பிரச்சினைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் எனவும் ராணுவம் குறிப்பிட்டது.

பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பொதுமக்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டு அந்தப் பகுதி பதற்றமாக உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடந்த கலவரங்களில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்