சிட்னி: சிட்னி போண்டாய் கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரை துணிச்சலாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சிட்னி பழக்கடை உரிமையாளரான அவரது கைகளில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அந்த 43 வயது நபர் அகமட் அல் அகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சரமாரியாக சுட்டுக் கொண்டிருந்த துப்பாக்கிக்காரனை நோக்கிச் சென்ற அவர், துணிச்சலாக அவனது கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்து தரையில் கிடத்தினார்.
டிசம்பர் 14ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் 50 வயது தந்தையும் 24 வயது மகனும் செயல்பட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறை கூறியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அகமட்டின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது உறவினர் முஸ்தஃபா ‘7நியூஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நூறு விழுக்காடு ‘ஹீரோ’ அவர் என்றார் முஸ்தஃபா.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பல உயிர்களைக் காப்பாற்றிய அகமட் துணிச்சலான நபர் என்று பாராட்டியுள்ளார்.

