ஹாங்காங்: ஹாங்காங்கில் உயரமான கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீக்கு பலியானோரின் எண்ணிக்கை குறைந்தது 128க்கு அதிகரித்துள்ளது.
சுமார் 200 பேரை இன்னும் காணவில்லை. 12 தீயணைப்பு அதிகாரிகள் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள டாய் போ பகுதியில் இருக்கும் வாங் ஃபுக் கோர்ட் வீடமைப்புக் கட்டடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம், அந்நகரில் கிட்டத்தட்ட 80 ஆண்டு காலத்தில் நேர்ந்திடாத ஆக மோசமான தீச்சம்பவமாகும்.
24 மணிநேரத்துக்கும் மேலாக எரிந்துகொண்டிருந்த தீ வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) அதிகாலைக்குள் பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியில் புதுப்பிப்புப் பணிகள் நடந்து வந்தன. அவற்றைச் சுற்றி மூங்கிலால் செய்யப்பட்ட சாரக்கட்டுகள் போடப்பட்டிருந்தன.
எட்டுக் கட்டடங்கள் இருந்த வான் ஃபுக் வீடமைப்பு வளாகத்தில் உயரமாக இருக்கும் இரு கட்டடங்களில் பலியானோரில் பெரும்பாலானோர் இருந்ததாக தீயணைப்புச் சேவைப் பிரிவின் துணை இயக்குநர் டெரெக் சான் கூறினார். வளாகத்தில் இருக்கும் பல கட்டடங்களில் வசித்து வந்தவர்களில் பலரும் உயிருடன் இருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் மேல்விவரம் ஏதும் வழங்கவில்லை.
அக்கட்டடங்களில் ஒன்றின் படிக்கட்டில் உயிர் தப்பியவர் ஒருவர் இருந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.
அளவுகடந்த வெப்பம், மோசமான புகை, இடிந்து விழுந்துகொண்டிருந்த சாரக்கட்டுகள் ஆகியவற்றை எதிர்கொண்டு மீட்புப் பணியாளர்கள், கட்டடங்களின் மேல்தளங்களில் இடிபாடுகளில் சிக்கியதாக நம்பப்பட்ட குடியிருப்பாளர்களைச் சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தீயணைப்புப் பிரிவுக்கு வந்த 25 உதவி அழைப்புகளுக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை என்று திரு டெரெக் சான் குறிப்பிட்டார். ஆக அண்மையில் வந்த மூன்று அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாங் ஃபுக் கட்டடங்களின் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பிரெஸ்டீஜ் கன்ஸ்டிரக்ஷன் (Prestige Construction) நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரையும் பொறியியல் ஆலோசகரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், பாதுகாப்பற்ற பொருள்களைப் பயன்படுத்தியதால் நோக்கமின்றி கொலை செய்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

