ஹாங்காங்: ஹாங்காங் பல்கலைக்கழகமொன்று அண்மையில் நடந்த தீச்சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த மாணவர் சங்கத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
அந்தக் கோரத் தீச்சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டதற்குப் பல்கலையின் வளாகத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தீச்சம்பவத்தில் மரணமடைந்தோருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அதில் விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகம், மாணவர் சங்கத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாய் நிறுத்துவதாகக் கூறியது. அதன் தொடர்பில் பல்கலை வெளியிட்ட கடிதம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) பொதுவெளியில் பகிரப்பட்டது.
நகரின் வட பகுதியில் உள்ள தாய் போ வட்டாரத்தில் அமைந்திருக்கும் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்புக் கட்டடங்களில் நெருப்பு மூண்டது. அதில் 159 பேர் பலியாயினர். 1980க்குப் பிறகு உலகில் நேர்ந்த ஆக மோசமான குடியிருப்புக் கட்டடத் தீச்சம்பவமாக அது கருதப்படுகிறது.
சங்கம் முறையாகப் பிரதிநிதிக்கப்படவில்லை என்றும் நிதி நிர்வாகம் சரியாக இல்லை என்றும் பல்கலை கூறியது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறது மாணவர் சங்கம்.
பல்கலையின் நடவடிக்கை கவலையளிப்பதாகச் சங்கம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டது.
மாணவர் சங்கத்தின் அறிவிப்புப் பலகையில் தீச்சம்பவம் குறித்த அனுதாபச் செய்திகள் இடம்பெற்றிருந்தன. அந்த அறிவிப்புப் பலகை, ‘ஜனநாயகச் சுவர்’ என்று அழைக்கப்படுகிறது.
அந்தச் சுவருக்கு முன்பு இப்போது உயரமான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
பல்கலை அதுகுறித்துக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

