ஹாங்காங்: கடந்த அரைநூற்றாண்டில் கண்டிராத ஆக மோசமான தீச்சம்பவத்தைக் கண்ட ஹாங்காங் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் நவம்பர் 26 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலை உள்ளது.
இந்நிலையில் தீச்சம்பவத்தின் வடுக்களை ஏந்திய வீதிகள், நெருப்புக்கு இரையான இல்லங்கள் என வெறிச்சோடிய வட்டாரத்திற்கு அக்கம்பக்கத்தில் வசிப்போர், அந்தச் சம்பவம் தந்துவிட்டுச் சென்றிருக்கும் சோகத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளனர்.
அந்தப் பயங்கர சம்பவத்தின்போது ஏற்பட்ட நினைவுகள், கண்களால் பார்த்த மரணங்கள் ஆகியவற்றால் துயருற்றிருக்கும் குடியிருப்பாளர்களால் தங்களின் இயல்பு வாழ்க்கை முறைக்குத் திரும்ப இயலவில்லை என்று அந்நாட்டு ஊடகங்களின் செய்திக் குறிப்புகள் கூறின.
கட்டட கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை இதுவரை தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மக்கள் பரவலாகக் கருத்து கூறிவருகின்றனர்.
மேலும், தீவிபத்து தொடர்பாக இதுவரை எந்த அரசு அதிகாரியும் பதவி விலகவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இதனால் அரசாங்கத்திற்கு எதிரான சமூகத்தின் சினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் சம்பவம் குறித்த விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஹாங்காங் அரசு கூறியுள்ளது.

