டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி ஈரான் அமெரிக்காவுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
அதில் பல நிபந்தனைகளை ஈரான் உள்ளடக்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அதன் துறைமுகங்கள் மீதான தடைகளை அகற்றுவது போன்றவை அதில் அடங்கும்.
நீரிணையை ஏழு நாள்களுக்குள் திறக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது என்பதை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரகாச்சி ஈரானிய ஊடகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாடு செப்டம்பர் மாதம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈரான் அதன் நிபந்தனைகள் உடனான ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் முன்வைத்தது.
அமெரிக்கா அதனைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்ததாகப் பிறகு ஈரான் தெரிவித்தது.
ஆயினும் கடந்த வாரம் நடந்த இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள் நிறுத்திவைக்கப்பட்டதாக ஈரானின் பாதுகாப்புத் துறைத் தலைவர் குறிப்பிட்டார். ஏனெனில் அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்த ஏழு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டது என்று அவர் விளக்கினார்.
பாக்தாத்தில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டபோது ஈரானின் வெளியுறவு அமைச்சர் இதுகுறித்து கருத்துரைத்தார்.
“எங்களது நிலைப்பாடு தெளிவானது. ஏழு நாள்களுக்குள் நீரிணையைத் திறப்பதற்கான அடிப்படைத் திட்டத்துடன் ஓர் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க அதிகாரிகள் முன்வைத்த கருத்துகளை நாங்கள் ஆராய்கிறோம். ஆயினும் எங்களது பரிந்துரை அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. “அமெரிக்காவிடம் நேர்மை இருந்தால் நீரிணையைத் திறக்க முடியும். ஆனால், அவர்களிடம் அது இல்லை,” என்றார் அமைச்சர் அபாஸ்.
பல நிபந்தனைகளில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை, வட்டாரத்தின் அனைத்து பகுதிகளிலும் போர் நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் போன்றவையும் உள்ளன.
அமெரிக்கா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் ஆறு நாள்களில் நீரிணை திறக்கப்படும் என்றார் அமைச்சர் அபாஸ்.
அணுவாயுத ஆற்றலை மேம்படுத்தும் ஈரானின் திட்டம் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள முடியாத அம்சமாக உள்ளது. அதுவே இருநாடுகளின் கருத்துவேறுபாட்டின் முக்கிய மையப்புள்ளி.
அதன் யுரேனிய செறிவூட்டலை வெகுவாக ஈரான் குறைத்துக்கொண்டால் எட்டு மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புள்ளது என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
