சான் பிரான்சிஸ்கோ: கணினிகளையும் அச்சு இயந்திரங்களையும் உருவாக்கும் எச்பி (HP) நிறுவனம், உலக அளவில் அதன் ஊழியரணியில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டைக் குறைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, 4,000 முதல் 6,000 ஊழியர்கள் வரை ஆட்குறைப்புக்கு ஆளாவார்கள் என்று கணிக்கப்படுகிறது. பெரிய அளவிலான மறுசீரமைப்புத் திட்டத்தை எச்பி நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) அறிவித்தது. உற்பத்தித்திறனை மெருகேற்றச் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைக் கையிலெடுக்கப்போவதாக அது சொன்னது.
பயனீட்டாளர்களின் தேவைகளை நிறைவேற்றவும் புத்தாக்க நடவடிக்கைகளை அதிகரிக்கவும் ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டில் கவனம் செலுத்தப்போவதாக நிறுவனம் கூறியது.
எச்பியின் ஆட்குறைப்பு நடவடிக்கை, தொழில்நுட்பத் துறையில் நிலவும் உலகளாவிய போக்கைப் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது. நிறுவனங்கள், ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக அளவு முதலீடு செய்கின்றன. நடைமுறைச் செலவுகளைக் குறைக்கத் தொழில்நுட்பத்தை அவை பயன்படுத்துகின்றன.
கூகல், மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் கடந்த ஈராண்டில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. ஏஐ தொழில்நுட்பத் திட்டங்களின் காரணமாக, வேலைகள் உட்பட பல்வேறு வளங்களை மாற்றியமைக்க வேண்டியிருப்பதாகப் பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பிட்டன.
பயனீட்டாளர்களுக்கு ஆதரவு, உள்ளடக்கத் தணிக்கை, தரவு உள்ளீடு, கணினி நிரலாக்கம் முதலிய பணிகளை ஏஐ தொழில்நுட்பம் பாதிப்பதாகத் தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏஐ திட்டத்தால் 2028ஆம் ஆண்டுக்குள் வருடாந்தரச் சேமிப்பு ஏறக்குறைய 1 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எச்பி நம்பிக்கை தெரிவித்தது.
கணினி, அச்சு இயந்திரச் சந்தையில் மாறிவரும் தேவைகளுக்கு இடையே, நிறுவனம், அதன் வர்த்தக உத்திகளை உருமாற்றும் முயற்சியில் கவனம் செலுத்திவருகிறது.

