ஜோகூர் பாரு: கோலாலம்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையேயான மின்சார ரயில் சேவை 3ன் (இடிஎஸ்3) முதலாவது பயணம், ஜோகூர் மக்களுக்கும், இரு இடங்களுக்கும் இடையே நேரடி ரயில் சேவைக்காக நீண்ட காலமாகக் காத்திருந்த வழக்கமான பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.
பயணிகள் தம்படம் (செல்ஃபி) எடுப்பதையும், ரயில் வடிவமைப்புகளுடன் பொருந்தக்கூடிய டி-சட்டைகளை அணிந்திருப்பதையும் காண முடிந்தது. சிலர் இடிஎஸ் பொருள்களுக்காக வரிசையில் நின்று, ஒரு சாவடியில் நினைவுப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
காலை 8 மணிக்கு வாயில்கள் திறக்கப்பட்டதும், பயணிகள் தங்கள் மின்-பயண அட்டைகளை நுழைவுக் கூடங்களில் ஸ்கேன் செய்தனர். பயணிகளை மஞ்சள் சீருடை அணிந்த ரயில் குழுவினர் வரவேற்றனர்.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) காலை சுமார் 8 மணிக்கு கேஎல் சென்ட்ரலில் இருந்து 233 பயணிகளுடன் புறப்பட்ட முதல் ரயில், பிற்பகல் 12.20 மணிக்கு ஜேபி சென்ட்ரலை வந்தடைந்தது.
தெற்கு தீபகற்பத்தில் பொதுப் போக்குவரத்து அமைப்பின் நவீனமயமாக்கல் மற்றும் முன்னேற்றத்திற்கான சான்றாக இடிஎஸ்3 இருப்பதை பெரும்பாலான பயணிகள் விவரித்தனர்.
இடிஎஸ்3 மூலம், பயணிகள் வேகமான பயணத்தை அனுபவிக்க முடியும். ஏனெனில் கேஎல் சென்ட்ரலுக்கும் ஜேபி சென்ட்ரலுக்கும் இடையேயான பயண நேரம் மணிக்கு 140 கிலோமீட்டர் (கிமீ) வேகத்தில் சுமார் நான்கு மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். சாலை வழியாக அந்தப் பயணத்துக்கு ஏழு மணிநேரம் ஆகும்.
கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல் வழித்தடத்தில் தற்போது தினமும் நான்கு இடிஎஸ் சேவைகள் இருக்கும் என்று மலேசிய தேசிய ரயில் கழகம் (கேடிஎம்பி) முந்தைய அறிக்கையில் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், மலேசிய ரயில் நிறுவனமான கேடிஎம் ஊழியர்கள், ரயில் டிக்கெட்டுகளின் மரப் பிரதிகள் கொண்ட பரிசுப் பைகளை வழங்கினர்.
ஜோகூர் மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான உயர் அதிகாரி திரு லீ டிங் ஹான், குளுவாங், பாலோ போன்ற ஜோகூர் நகரங்களுக்கு இடிஎஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக இருக்கும் என்று கூறினார்.

