ஷாஆலம்: மலேசிய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கும் போக்குவரத்து அமைச்சர் ஆண்டணி லோக்கின் அதிகாரபூர்வப் பதவி விலகல் கடிதம் இன்னமும் கிடைக்கவில்லை. அதற்காக தான் காத்திருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“கடிதத்திற்கு இன்னமும் காத்திருக்கிறேன்,” என்று செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற யுஐடிஎம் (UiTM) பல்கலைக்கழகத்தின் 70வது ஆண்டுவிழா முன்னாள் மாணவர் சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அன்வார் கூறினார்.
ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) பொதுச்செயலாளருமான திரு லோக்கின் பதவி விலகல் நிலை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, சீனாவிற்கு மலேசியப் பிரதமருடன் மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட திரு லோக், மலேசியா திரும்பியதும் தமது பதவி விலகல் கடிதத்தை அன்வாரிடம் சமர்ப்பிக்கப்போவதாக செப்டம்பர் 23ம் தேதி கூறியிருந்தார்.
தமது பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும் நாடு திரும்பியதும் அதிகாரபூர்வப் பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்ற ஜனநாயகச் செயல் கட்சி (டிஏபி) மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரு லோக் பதவி விலக முன்வந்தார்.
அதேவேளையில், ‘டிஏபி’ கட்சியின் மற்ற அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் திரு லோக் குறிப்பிட்டிருந்தார்.
