அமெரிக்காவிலிருந்து வியட்னாமுக்குத் திருப்பி அனுப்பப்படுவோர் அதிகரிப்பு

அமெரிக்காவிலிருந்து வியட்னாமுக்குத் திருப்பி அனுப்பப்படுவோர் அதிகரிப்பு

படம்: ஹோ சி மின் சிட்டி காவல்துறை

26 Sep 2026 - 5:12 pm

2 mins read

ஹனோய்: அமெரிக்காவிலிருந்து வியட்னாமுக்குத் திருப்பி அனுப்பப்படும் வியட்னாமியர்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 110 வியட்னாமியர்கள் அவர்களின் நாட்டுக் குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனர்.

அமெரிக்கக் குடிநுழைவு, சுங்க அமலாக்கப் பிரிவின் நீதிமன்ற ஆவணங்களின்படி, 2024 முதல் 2026ஆம் நிதியாண்டு ஜூன் வரை 1,851 வியட்னாமியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் 2026ஆம் நிதியாண்டில் மட்டும் 1,094 பேர் வியட்னாமுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை தற்போது மேலும் 200 வரை உயர்ந்துள்ளதால் அண்மைக்காலத்தில் வியட்னாமியர்கள் நாடுகடத்தப்படுவது பேரளவில் அதிகரித்துள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்களில் பெரும்பாலானோர், பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவிற்குச் சென்றவர்கள் ஆவர். முன்னதாக, இவர்கள் நாடு கடத்தப்படுவதிலிருந்து சட்டப் பாதுகாப்பு பெற்றிருந்தனர்.

தற்போது வியட்னாம் திரும்பியுள்ள அவர்கள், புதிய அடையாள ஆவணங்களைப் பெறுவது, புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுவது, தங்குமிடம் அமைப்பது, தங்களின் உறவினர்களைத் தொடர்புகொள்வது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

திருப்பி அனுப்பப்பட்ட சிலருக்கு தங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தகுதியான உறவினர்கள் யாரும் இல்லை என்றும் பலர் நீண்டகாலமாக தங்களின் குடும்பத் தொடர்பை முற்றிலும் இழந்துவிட்டனர் என்றும் ஹோ சி மின் சிட்டி காவல்துறை அண்மையில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

திருப்பி அனுப்பப்பட்டவர்களில் சிலர் முதியவர்களாகவும், நலிவடைந்த மோசமான உடல்நலக் குறைபாடு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

கடந்த 1995 ஜூலை 12ஆம் தேதிக்கு முன்னர் அமெரிக்கா சென்ற வியட்னாமியர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஏற்பாட்டின்படி நாடு கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். 2008ல் கையெழுத்தான உடன்பாடும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தது.

ஆனால், டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர நெருக்குதலால் 2020ல் இரு நாடுகளும் புதிய புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

இதன் தொடர்ச்சியாக, 2025ல் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, வியட்னாமியர்களைத் தடுப்புக்காவலில் வைப்பதையும் நாடுகடத்துவதையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். அத்துடன், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்ட தளர்வு நடைமுறைகளும் முறைப்படி ரத்துசெய்யப்பட்டன.

தற்போது அமெரிக்காவில் 8,600க்கும் மேற்பட்ட வியட்னாமியர்களுக்கு இறுதி வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்அமெரிக்காநாடுகடத்தல்