கோலாலம்பூரில் 21வது மாடியிலிருந்து விழுந்து உயிர் பிழைத்த இந்திய மாது

கோலாலம்பூரில் 21வது மாடியிலிருந்து விழுந்து உயிர் பிழைத்த இந்திய மாது

கோப்புப் படம்: மலேமெயில்

26 Nov 2026 - 5:40 pm

1 mins read

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 21வது மாடியிலிருந்து விழுந்ததாகக் கருதப்படும் 29 வயது இந்திய நாட்டு மாது அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் நவம்பர் 26ஆம் தேதி காலை நிகழ்ந்ததாக ‘உத்துசான் மலேசியா’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காலை 11.02 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அப்பெண் விழுந்ததாக நம்பப்படும் மாடியில் அவரது தனிப்பட்ட உடைமைகள் சிலவற்றைக் காவல்துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

“பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; எனினும், அவரது இடது கால், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது,” என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக் குறிப்பிட்டார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அப்பெண் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் அல்ல என்றும், அவர் செகாம்புட் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும், சாட்சிகளிடமிருந்து இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

“விசாரணைக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நெருங்கிய உறவினர்களைக் கண்டறியும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்,” என்று திரு ஹூ மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்