பன்னிரண்டு நாடுகளுடன் இந்தியா ராணுவப் பயிற்சி

பன்னிரண்டு நாடுகளுடன் இந்தியா ராணுவப் பயிற்சி

2 mins read
உள்நாட்டில் தயாரான ராணுவ ஆயுதங்கள் பயிற்சியில் காட்சிப்படுத்தப்படும்
a6a1b200-129f-4d8f-8a15-456ab1d873de
பூட்டான், கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மாலத் தீவு, மியன்மார், நேப்பாளம், பிலிப்பீன்ஸ், சிச்சிலிஸ், இலங்கை, வியட்னாம் ஆகிய 12 நாடுகளின் ராணுவத் தலைவர்கள் இந்திய ராணுவத் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். - படம்: டைம்ஸ் அப் இந்தியா

புதுடில்லி: பன்னிரண்டு நாடுகள் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பங்கேற்கும் ‘பிரகாதி 2026’ என்ற கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயா மாநிலத்தில் புதன்கிழமை (மே 20) தொடங்கியது.

மேகாலயா மாநில உம்ரோய் ராணுவத் தளத்தில் இரண்டு வாரங்கள் அப்பயிற்சி நடைபெறவுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் காடுகளில் மேற்கொள்ளப்படும் தற்காப்புச் செயல்பாடுகள் மீதும் கவனம் செலுத்தப்படும்.

வட்டாரத் தற்காப்பை வலுப்படுத்தி நாடுகளுக்கு இடையே செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் அப்பயிற்சிகள் பன்னாட்டு ராணுவப் படைகளை இந்தியாவுக்குள் ஒன்று திரட்டியுள்ளது.

பூட்டான், கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மாலத் தீவு, மியன்மார், நேப்பாளம், பிலிப்பீன்ஸ், சிச்சிலிஸ், இலங்கை, வியட்னாம் ஆகிய 12 நாடுகள் இந்தியாவுடன் அப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப் படையின் செயல்பாடுகளும் பயிற்சியில் உள்ளடங்கும்.

கூட்டு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் குறித்தும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் வட்டார ராணுவப் படைகளின் வளர்ச்சி, உருமாற்றம் ஆகியவற்றுக்கான பங்காளித்துவ அமைப்பு பிரகாதி ஆகும்.

தற்சார்பு இந்தியாவின் ‘ஆத்மநிபார் பாரத்’ எனப்படும் திட்டத்தின்கீழ் உள்நாட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன ராணுவக் கருவிகள், தளவாடங்கள் ஆகியன இந்த கூட்டுப் பயிற்சியில் காட்சிப்படுத்தப்படும்.

இந்தியப் பாரம்பரிய முறையில் பயிற்சியில் பங்கேற்க வருகை தந்த அனைத்து ராணுவப் படைகளுக்கும் வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டன.

இந்திய ராணுவத் தலைவர் வரவேற்புரை

தற்காலத் தற்காப்புச் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தியத் தரைப்படைத் தலைவர் மேஜர் சுனில் ஷியோரன் அவரது வரவேற்புரையில் வலியுறுத்தினார்.

பயிற்சியின் இலக்குகளை அடைய பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டின் வலிமையும் கொள்கையும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்