ஜகார்த்தா: இந்தோனீசியா, அதன் முன்னாள் குடிமக்களை நிரந்தரமாக நாட்டில் வேலை பார்த்தபடி தங்கிக்கொள்ள அனுமதி வழங்குகிறது.
இரட்டைக் குடியுரிமைக்குப் பதிலாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிநுழைவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்தோனீசியா திறந்துவிட்டுள்ளது.
இந்தோனீசிய சட்டப்படி ஒரே நேரத்தில் இரு நாடுகளின் குடியுரிமைகளை வைத்திருக்க முடியாது. அதன்படி இரு நாட்டுக் கடப்பிதழ்களை வைத்திருப்போர் 18 வயதை அடைந்தவுடன் இரண்டில் ஒரு குடியுரிமையைக் கைவிடவேண்டும்.
முன்னாள் குடிமக்களை நாட்டில் வேலை பார்த்தபடி நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கும் புதிய திட்டத்தின் பெயர் உலகளாவிய இந்தோனீசியக் குடியுரிமை (ஜிசிஐ). இது, இந்தியாவின் ஓசிஐ திட்டத்தைப் போல் வரையப்பட்டுள்ளதாக இந்தோனீசிய குடிநுழைவு அமைச்சு குறிப்பிட்டது.
ஓசிஐ திட்டத்தின்கீழ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கிக்கொண்டு அங்கு வேலை பார்க்கலாம், எப்போது வேண்டுமானாலும் அங்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
“இந்தோனீசியாவுடன் வலுவான தொடர்புகளைக் கொண்ட வெளிநாட்டவருக்கு காலக்கெடுவின்றி இங்குத் தங்க அனுமதி வழங்குவதன் மூலம் ஜிசிஐ, இரட்டைக் குடியுரிமைப் பிரச்சினைகளுக்கு உத்திபூர்வத் தீர்வாக அமைகிறது,” என்று குடிநுழைவு அமைச்சின், உள்நாட்டில் தங்குவதன் தொடர்பான குடிநுழைவுப் பிரிவின் இயக்குநர் இஸ் எடி எக்கோ புத்ரான்டோ சனிக்கிழமை (நவம்பர் 22) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
உலகம் முழுவதும் வாழும் இந்தோனீசிய வம்சாவளியினர், தேசிய வளர்ச்சிக்குக் கைகொடுக்கக்கூடும் என்றும் அவர் சுட்டினார்.
முன்னாள் இந்தோனீசியக் குடிமக்கள், கலப்புத் திருமணங்களின்வழி பிறந்த பிள்ளைகள் உள்ளிட்டோர் இந்தத் திட்டத்துக்குத் தகுதிபெறுவர் என்று திரு புத்ரான்டோ விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியர்கள் பலர் மேம்பட்ட வாய்ப்புகளை நாடி அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்குமாறு அதிகமாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது.
2019லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 4,000 இந்தோனீசியர்கள், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றனர் என்று இந்தோனீசியாவின் அதிகாரபூர்வக் குடிநுழைவுப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

