இந்தோனீசியாவில் திறன் பற்றாக்குறை; வெளிநாடு செல்லும் பட்டதாரிகள்

2 mins read
e3a1ddee-fce0-4e0e-a856-47dd7276e60b
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தா. - படம்: migrationology.com / இணையம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிகமான இளம் திறனாளர்கள் வேலைக்காக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

அந்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறித்த கவலை நிலவுவதால் பலர் அவ்வாறு செய்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பட்டதாரிகள்கூட ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பண்ணை விலங்கு ஆலை ஊழியர்கள் போன்ற பணிகளைச் செய்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் வேலை விடுமுறை விசாவின்கீழ் (Work Holiday Visa) அதுபோன்ற வேலைகளைப் பலர் செய்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் அந்த விசாவைப் பெற்றுக்கொள்வோரில் ஆக அதிகமானோர் இந்தோனீசியர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2022-23 ஆண்டு காலத்தில் 2,984 இந்தோனீசியர்கள் அந்த விசாவைப் பெற்றனர்; 2023-24 ஆண்டு காலத்தில் அந்த எண்ணிக்கை 4,285ஆகக் கூடியது என ஆஸ்திரேலிய உள்துறை விவகார அமைச்சு குறிப்பிட்டது.

அதேபோல், வேறு சில பட்டதாரிகள் வேலை வாய்ப்பு தேடி அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் போகின்றனர். கூடுதல் சம்பளம் ஈட்டவும் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் அமெரிக்கா சிறந்த நாடு என்று அத்தகையோருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இப்படிப் பல திறனாளர்கள் வெளியேறுவது இந்தோனீசியாவின் பொருளியல் வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விவகாரம் சரியாகக் கையாளப்படாவிட்டால் அவ்வாறு நிகழக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி இந்தோனீசியாவின் திறனாளர்கள் தொடர்ந்து வெளியேறினால் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல், தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களில் அந்நாடு பாதிக்கப்படக்கூடும் என்று கோர் என்றழைக்கப்படும் பொருளியல் சீர்திருத்த நிலையத்தின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஃபைசால் எச்சரித்துள்ளார்.

வரும் 2045ஆம் ஆண்டுக்குள் உலகின் ஆகப் பெரிய பொருளியல்களில் ஒன்றாக உருவெடுக்கும் இலக்கை இந்தோனீசியா கொண்டுள்ளது. ‘தங்க இந்தோனீசியா’ (Golden Indonesia) என்றழைக்கப்படும் அந்த இலக்கை, பல திறனாளர்கள் வெளியேறுவது கேள்விக்குறியாக ஆக்கலாம் என காட்ஜா மாடா பல்கலைக்கழகத்தின் ஊழியரணி வல்லுநர் டாட்ஜுதீன் நோவெர் எஃபெண்டி குறிப்பிட்டார்.

அதேவேளை, திறனாளர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும்போது நாணயச் செலாவணி தொடர்பில் இந்தோனீசியா பலனடையக்கூடும் என்றும் டாக்டர் டாட்ஜுதீன் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்