இந்தோனீசிய பள்ளி இலவச உணவுத் திட்டம்: நோய்வாய்ப்பட்ட 700 மாணவர்கள்

இந்தோனீசிய பள்ளி இலவச உணவுத் திட்டம்: நோய்வாய்ப்பட்ட 700 மாணவர்கள்

கோப்புப் படம்: ஏஎஃப்பி

30 Oct 2025 - 4:28 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பள்ளி இலவச உணவுத் திட்டம் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.

யோக்யகார்த்தா மாநிலத்தில் இத்திட்டத்தின்கீழ் தயார்செய்யப்பட்ட உணவை உட்கொண்ட கிட்டத்தட்ட 700 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி இலவச உணவுத் திட்டம், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தொடங்கிய ஒன்றாகும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், திரு பிரபோவோவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும்.

எனினும், புதன்கிழமை (அக்டோபர் 29) நிலவரப்படி இதன்கீழ் வழங்கப்பட்ட உணவை உண்டோரில் ஏறத்தாழ 15,000 சிறுவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஜேபிபிஐ எனும் அரசாங்க சார்பற்ற அமைப்பின் புள்ளிவிவரங்களில் இத்தகவல் தெரிய வந்தது.

பள்ளி இலவச உணவுத் திட்டத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யவேண்டும் என்று ஜேபிபிஐ குரல் கொடுத்து வந்துள்ளது.

உணவு சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்படாதது, அதைத் தாமதாக விநியோகிப்பது ஆகியவை திட்டத்தில் ஏற்பட்டுள்ள நச்சுணவுச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

யோக்யகார்த்தாவின் குனுங்கிடுல் வட்டாரத்தில், இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தின்கீழ் தயார்செய்யப்பட்ட உணவை உட்கொண்ட சுமார் 660 மாணவர்கள் நச்சுணவு உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் இரு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்