இரு குற்றவாளிகளை நாடுகடத்த இந்தோனீசியா, நெதர்லாந்து ஒப்பந்தம்

1 mins read
குற்றவாளிகளில் ஒருவர் மரண தண்டனைக் கைதி
22f8a44d-30a1-4337-be95-1ac7b1da8f85
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வில் இந்தோனீசியாவுக்கான நெதர்லாந்து தூதர் மார்க் கெரிட்சன் (இடது), இந்தோனீசியாவின் சட்ட, மனித உரிமை, குடிநுழைவு மூத்த அமைச்சர் யுஸ்ரில் இஸ்ஸா மகேந்திரா. - படம்: இபிஏ

ஜகார்த்தா: போதைப்பொருள் குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட்ட, நெதர்லாந்தைச் சேர்ந்த இரு வயதான கைதிகளை நாடுகடத்த வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இந்தோனீசியாவும் நெதர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் மரண தண்டனைக் கைதியாவார்.

சீக்ஃபிரிட் மெட்ஸ், 74, அலி டோக்மான், 65, ஆகியோர் அந்தக் குற்றவாளிகள் என்று இந்தோனீசியாவின் சட்ட, மனித உரிமை, குடிநுழைவு மூத்த அமைச்சர் யுஸ்ரில் இஸ்ஸா மகேந்திரா தெரிவித்தார். மெட்சுக்கு 2008ஆம் ஆண்டு தலைநகர் ஜகார்த்தாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

டோக்மானுக்கும் முதலில் 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஜகார்த்தாவில் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் வேன் வீலுடன் திரு யுஸ்ரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். திரு டேவிட் வேன் வீல், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நிகழ்வில் மெய்நிகரில் கலந்துகொண்டார்.

வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 8) மெட்சும் டோக்மானும் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு அனுப்பப்படுவர் என்று திரு யுஸ்ரில் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டிலிருந்து இந்தோனீசியா, மரண தண்டனைகளை நிறைவேற்றவில்லை. எனினும், அந்நாடு ஆண்டுதோறும் தொடர்ந்து மரண தண்டனைகளை விதித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்