இந்தோனீசியா காட்டுத் தீ: சுவாசப் பிரச்சினையில் ஓராங் ஊத்தான்

இந்தோனீசியா காட்டுத் தீ: சுவாசப் பிரச்சினையில் ஓராங் ஊத்தான்

படம்: ராய்ட்டர்ஸ்

30 Aug 2026 - 7:39 pm

2 mins read

கெத்தாபாங்: இந்தோனீசியாவின் போர்னியோ தீவில் தீ மூண்டுள்ள பகுதியிலிருந்து மீட்கப்பட்ட ஓராங் ஊத்தான் எனும் மனிதக் குரங்கு ஒன்று மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவதியுறுகிறது.

மேற்குக் கலிமாந்தானின் போர்னியோ தீவில் உள்ள கெட்டாபாங்கில் உள்ள விவசாயி ஒருவர், பண்ணைக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) தீ மூண்ட இடத்திற்கு அருகே பலவீனமாகக் கிடந்த ஓராங் ஊத்தானைக் கண்டெடுத்தார்.

வலுவிழந்த நிலையில் காணப்பட்ட ஓராங் ஊத்தானுக்குத் தண்ணீர் கொடுத்ததாக அந்த விவசாயி தெரிவித்தார்.

ஓராங் ஊத்தானுக்கு யாயாசான் இனிசியாசி அலாம் ரிஹெபிலிடாசி என்ற அமைப்பு கால்நடை மருத்துவருடன் வந்து சிகிச்சையளித்தது.

போதுமான உயிர்வாயு இல்லாததால் ஓராங் ஊத்தான் மயக்கமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராங் ஊத்தான் இருந்த சுற்றுவட்டாரத்தில் அடர்த்தியான புகையும் இருந்ததாகக் கூறப்பட்டது.

நல்லவேளையாக, ஓராங் ஊத்தானுக்குக் கடுமையான தீக் காயங்கள் இல்லை என்று கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தினார். ஆனால் அதற்குச் சுவாசப் பிரச்சினை இருந்ததாகவும் வாந்தி எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட ஓராங் ஊத்தானுக்குக் கிட்டத்தட்ட 20 வயது என்று அவர் கூறினார்.

போர்னியோ, சுமத்ராத் தீவுகளின் காடுகளிலும் நிலப்பகுதியிலும் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை இந்தோனீசியா தீவிரப்படுத்தியுள்ளது.

புகைமூட்டம் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் இணையம்வழி நடத்தப்படுவதற்கு உத்தரவிடப்பட்டது.

மலேசியாவின் சில பகுதிகளிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, குறைந்தது 202,010 ஹெக்டர் பரப்பளவில் உள்ள நிலம் காட்டுத் தீக்கு இரையாகிவிட்டதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாகாட்டுத்தீவனவிலங்குபாதிப்பு