ஜகார்த்தா: வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஓர் அங்கமாக, சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதிகளைக் குறைத்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து அதைத் தருவிக்க இந்தோனீசியா திட்டமிட்டுள்ளதாக அதன் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியப் பொருள்களுக்கு அமெரிக்கா 32 விழுக்காட்டு வரி விதித்துள்ளது. ஆனால், மற்ற நாடுகளைப் போன்றே பேச்சுவார்த்தைகளுக்கு வழிவிட ஜூலை வரை வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதிகளைக் குறைத்துக்கொள்ளும் நடைமுறை படிப்படியாக இடம்பெறும் என்று இந்தோனீசிய எரிசக்தி, கனிம வளத்துறை அமைச்சர் பஹ்லில் லஹதாலியா கூறினார்.
இந்தோனீசியா அதன் மொத்த எரிபொருள் இறக்குமதிகளில் ஆரம்பக்கட்டத்தில் 60 விழுக்காடு வரை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு மாற்றிக்கொள்ளக்கூடும் என அவர் சொன்னார்.
“சிங்கப்பூரிலிருந்து அல்லாது மற்ற நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதிகளை நாங்கள் பெற்றுக்கொள்வோம் என்பது கிட்டத்தட்ட நிச்சயம்,” எனச் செய்தியாளர்களிடம் கூறிய அவர், இந்த மாற்றம் அடுத்த ஆறு மாதங்களில் இடம்பெறலாம் என்றார்.
உலக அரசியல் சூழல் மாறிவரும் வேளையில் குறைந்த விலைப் பொருள்களை நாடும் இந்தோனீசியா, அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள விநியோகிப்பாளர்களிடம் எரி பொருளை வாங்கும் என்று திரு பஹ்லில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கடுமையான வரிவிதிப்பைத் தவிர்க்க அந்நாட்டுடன் வர்த்தக உறவுகளைச் சீராக்கிக்கொள்ள முனையும் நாடுகளில் இந்தோனீசியாவும் ஒன்று.
வரிவிதிப்பு விவகாரத்துக்குத் தீர்வுகாண அமெரிக்காவுக்கு இந்தோனீசியாவின் பரவலான பரிந்துரையின் ஓர் அங்கமாக, அமெரிக்காவிலிருந்து எரிபொருள் இறக்குமதிகளை அது அதிகரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க எரிசக்தி இறக்குமதிகளை ஏறக்குறைய US$10 பில்லியன் அதிகரிக்க தான் விரும்புவதாக இந்தோனீசிய அரசாங்கம் கூறியுள்ளது. இதில் அமெரிக்க எரிபொருள், கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்டவை அடங்கும்.
பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இப்போதுள்ளதைவிட அமெரிக்காவிடமிருந்து 10 மடங்கு கூடுதல் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தோனீசியா முனைவதாக திரு பஹ்லில் கூறினார். தற்போது இந்தோனீசியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிகளில் ஏறக்குறைய 4 விழுக்காடு அமெரிக்காவிலிருந்து வருபவை.

