ஜகார்த்தா: கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தோனீசியாவில் இதுவரை $590 மில்லியன் பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவரான ஜெனரல் மார்தினஸ் ஹுக்கும் தெரிவித்தார்,
கடந்த ஐந்து ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளைவிட இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது,
ஆக அண்மையில், கடந்த மே மாதம் பாத்தாம் தீவுக்கு உட்பட்ட கடற்பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 2.1 டன் ‘மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஏறத்தாழ எட்டு மில்லியன் போதைப் பித்தர்கள் பயன்படுத்தும் அளவாகும்.
2024ஆம் ஆண்டில் ஒரு டன்னுக்கும் குறைவான போதைப்பொருளை இந்தோனீசியா பறிமுதல் செய்தது. 2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 1.2 டன்னுக்கும் 2.8 டன்னுக்கும் இடைப்பட்ட அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகவல் இந்தோனீசிய அரசாங்கத் தரவுகளிலிருந்து பெறப்பட்டது.
மற்ற வகை போதைப்பொருளையும் இந்தோனீசியா இவ்வாண்டு பறிமுதல் செய்துள்ளது.
கஞ்சா, கொக்கைன் போன்றவை அவற்றில் அடங்கும்.
இதுபோன்று 2.65 டன் எடை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு குறைந்தது $95 மில்லியன்.
தொடர்புடைய செய்திகள்
‘மெத்’ போதைப்பொருள் மியன்மாரில் தயாரிக்கப்படுவதாகவும் அதை இந்தோனீசியாவுக்குக் கொண்டு வந்த கப்பல் தாய்லாந்தைச் சேர்ந்தது என்றும் திரு மார்டினஸ் ஹுக்கும் தெரிவித்தார்.
‘மெத்’ போதைப்பொளுள் பேரளவில் தயாரிக்கப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் போதைப்பொருள், குற்றவியல் தடுப்புப் பிரிவு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
‘மெத்’ போதைப்பொருளை அடிக்கடி உட்கொள்பவர்களின் இதயம், பற்கள், மூளை ஆகியவை கடுமையாகப் பாதிப்படையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றம், நினைவிழப்பு போன்ற பாதிப்புகளை அது ஏற்படுத்தக்கூடும்.

