ஜாகர்த்தா: சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் உருவாகியுள்ள அடர்ந்த புகைமூட்டத்தைக் கலைப்பதற்காக, தென் சுமத்ராவின் வான்பரப்பில் 2.4 டன் உலர் பனிக்கட்டிகளை இந்தோனீசியா தூவியுள்ளது.
தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் அந்த நடவடிக்கையை மேற்கொண்டது. பாலம்பாங் நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையப் பகுதியில் அடர்ந்த புகைமூட்டத்தால் விமானங்கள் பாதிக்கப்பட்தைத் தொடர்ந்து, அங்கு முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட மணி நேரம் இடம்பெற்ற செயற்கை மழை, வானிலை மாற்ற நடவடிக்கையின் மூலம் விமான நிலையப் பகுதியில் பார்க்கக்கூடிய தூரம் 1,000 மீட்டரிலிருந்து 3,000 மீட்டராக அதிகரித்தது.
எனினும், இந்த முன்னேற்றம் உலர் பனிக்கட்டியால் ஏற்பட்டதா பிற வானிலை மாற்றங்களால் நிகழ்ந்ததா என்பதை உறுதிப்படுத்தக் கூடுதல் ஆய்வுகள் தேவை என அதிகாரிகள் தெரிவித்தனர். அடர்ந்த புகையைக் கலைத்து வான்பரப்பில் மேலேறச் செய்யும் மாற்று வழியாக அத்தொழில்நுட்பம் சோதிக்கப்படுகிறது.
அத்துடன், மரவள்ளிக்கிழங்கு மாவு நீருடன் கலக்கும்போது தீயை அணைக்கும் கூழாக மாறும் போர்த்துகீசியப் பொடி ஆகியவற்றைப் பயன்படுத்தியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இந்தோனீசியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மரங்களுக்கோ விலங்குகளுக்கோ எவ்வித பாதகமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டுத் தீயணைப்புப் படை தெரிவித்தது.
