இந்தோனீசியாவின் செமேரு எரிமலை குமுறல்; சிக்கிய மலையேறிகள் வெளியேற்றம்

1 mins read
c8353fef-a1a6-4996-82a4-d009e15ad3c2
செமெரு எரிமலை குமுறல். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் செமேரு எரிமலை குமுறியதைத் தொடர்ந்து 900க்கும் அதிகமானோரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

மேலும், செமேருவில் சிக்கிக்கொண்ட 170 மலையேறிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் வியாழக்கிழமை (நவம்பர் 20) மேற்கொண்டனர்.

இந்தோனீசியாவின் ஆக உயரமான மலைகளில் ஒன்றான செமேரு, புதன்கிழமை (நவம்பர் 19) 10 முறை குமுறியது. அதனையடுத்து ஆக உயரிய அபாய எச்சரிக்கை நடப்பில் இருக்கிறது.

ஜாவா தீவில் அமைந்துள்ள செமேரு எரிமலையின் குமுறலால் பெரிய அளவில் புகை வெளியாகியிருக்கிறது, அதன் மேடுகளில் 13 கிலோமீட்டர் வரை கற்கள் எறியப்பட்டன.

செமேரு மலையின் கீழே முகாம் ஒன்றில் மலையேறிகள் சிக்கிக்கொண்டனர். அப்பகுதி எரிமலைக் குமுறல் ஏற்பட்ட பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 6.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மலையேறிகள் இரவு முழுவதும் முகாமில் கிக்கிக்கொண்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று செமேரு தேசிய பூங்கா அதிகாரியான செப்தி வர்தானி தெரிவித்தார்.

எல்லா மலையேறிகளும் அவர்களின் வழிகாட்டிகளும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிய திருவாட்டி வர்தானி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்