சுங்கை பட்டாணி: கெடாவின் புக்கிட் சிலாம்பு, தாமான் செம்பாக்கா இண்டா சாலையோரமுள்ள கரடுமுரடான பாதையில் பச்சிளம் குழந்தை ஒன்று சனிக்கிழமை (ஜூலை 12) நிர்வாணமாகக் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோலா முடா உதவி ஆணையரான ஹன்யான் ரம்லான், காலை 9.55 மணியளவில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததாகச் சொன்னார்.
குடியிருப்பாளர் ஒருவர் துணியைக் காய வைக்கச் சென்றபோது குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அப்பகுதியில் தேடினார் என்றார் அவர்.
“சாலையோரம் குழந்தை இருப்பதைக் கண்டு குடியிருப்பாளர் அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்க வீடுகளில் வசிப்பவர்கள் உதவிக்கு வந்தனர்,” என்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் இல்லை என்றார் அவர்.
“சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் பரிசோதனைக்காக குழந்தை சேர்க்கப்பட்டது. குழந்தையின் உடல்நலம் சீராக உள்ளது. வலதுபக்கத்திலும் வலது பகுதியிலும் சில சிராய்ப்புக் காயங்கள் காணப்பட்டன,” என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் 17 வயது இளையரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
“19 வயது பெண் அவரது காதலியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்தப் பெண்ணும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று திரு ஹன்யான் மேலும் தெரிவித்ததாக பெர்னாமா தகவலை ‘த ஸ்டார்’ மேற்கோள் காட்டியிருந்தது.

