ஜப்பானில் சளிக்காய்ச்சல் அபாய நிலையை எட்டியது

1 mins read
d54b6cc2-27a0-4cc3-950b-744fbadbe68c
‘ஹாங்காங் டைப் ஏ’ வகை கிருமிகளே பாதிப்படைந்தவர்களில் அதிகம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்:ஏஎஃப்பி

கடந்த பத்து ஆண்டுகளில் காணப்படாத அளவில் ஜப்பானில் சளிக்காய்ச்சல் பரவிவருவதாக ஜப்பானிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்துள்ளது.

அவற்றில் ‘ஹாங்காங் டைப் ஏ’ வகை கிருமிகளே பாதிப்படைந்தவர்களில் அதிகம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வழக்கத்துக்கு மாறாக காய்ச்சல் பனிக்காலத்துக்கு முன்பே பரவுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஜப்பானுக்குள் வரும் ஹாங்காங் மற்றும் தைவான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுப் பயணிகளை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள்ளான வாரத்தில் மட்டும் சுமார் 3,000 மருத்துவ அமைப்புகளில் 145,526 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு மருத்துவ நிலையத்தின் சராசரியான 30 சளிக்காய்ச்சல் நோயாளிகளை அந்த எண்ணிக்கை கடந்து 37.7 நோயாளிகளை தற்போது குறிக்கிறது என்று ஜப்பானின் சுகாதார, தொழிலாளர், பராமரிப்புநலன் அமைச்சு தெரிவித்துள்ளது.

பதிவுசெய்யப்பட்டுள்ள நோயாளிகள் அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 1.73 மடங்கு அதிகரித்துள்ளனர். ஜப்பானின் 47 மாவட்டங்களில் 24 மாவட்டங்களின் சளிக்காய்ச்சல் நோயாளிகளுக்கான உச்ச வரம்பு மீறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பரவுவதற்கான இதர காரணங்களாக நிலையற்ற வெப்பநிலை மாற்றங்கள், மோசமான காற்றோட்டம் போன்றவை அடையாளம் காணப்பட்டன.

தற்போது குழந்தைகளும் மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆண்டிறுதியில் அதிக மக்கள் நடமாட்டத்தால் பலர் காய்ச்சலுக்கு ஆளாவர் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்