‘கொரியா போஸ்ட்’ அஞ்சல் சேவை நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஐபி முகவரிகளைப் பயன்படுத்தி கொரிய அஞ்சல் நிறுவனத்தின் இணைய அஞ்சல் சேவைமீது நடத்தப்பட்ட இணையத் தாக்குதலில் இவை கசிந்ததாக சனிக்கிழமை (நவம்பர் 28) தெரிவிக்கப்பட்டது.
அதில் அஞ்சல் சமர்ப்பிப்புப் பதிவுகளும் கசிந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள கொரிய அஞ்சல் நிறுவனம், இத்தரவுக்கசிவின் முழு அளவைக் கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
நவம்பர் 17 முதல் 24ஆம் தேதிவரை பரிமாற்றத்தில் இருந்த பதிவு செய்யப்பட்ட அஞ்சல்களின் வாடிக்கையாளர்களது பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்களை இணைய ஊடுருவிகள் அணுகியுள்ளனர்.
பெறுநர்கள் குறுஞ்செய்தி வழியாக விநியோக அறிவிப்புகளைப் பெறவும், அஞ்சலைப் பெற விரும்பும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும் உதவும் கைப்பேசித் தள வசதியின்வழி இத்தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரே ஒரு நாளின் தரவுகளை மட்டும் ஆய்வு செய்ததில், நிறுவன வாடிக்கையாளர்கள் உட்பட 113,855 வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, தரவுக்கசிவின் முழு அளவு உறுதியானவுடன் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தனித்தனியாகத் தகவல் தெரிவிக்கப்படும் என்று கொரிய அஞ்சல் நிறுவனம் கூறியது.
தரவுக்கசிவால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், உரிய அதிகாரிகளுடன் ஒத்துழைத்துத் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம், தொடர்புடைய பிற சட்டங்களின்படி நிவாரணம் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்தது.
