வாக்களிக்க வருமாறு ஹாங்காங் மக்களுக்கு அழைப்பு

2 mins read
96a0898b-3190-4b03-9325-bd0bc0b5ec2d
ஹாங்காங்கின் தேர்தல் தேதியை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டேவிட் லோக் கூறியுள்ளார். - படம்: இபிஏ

ஹாங்காங்: ஹாங்காங் மக்களைத் தேர்தலில் வாக்களிக்க வருமாறு அதன் தேர்தல் ஆணையத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். அங்குத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) நடைபெறவுள்ளது. அண்மையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைக் காரணங்காட்டிச் சிலர், தேர்தலைத் தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஹாங்காங்கின் தேர்தல் தேதியை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது என்று தேர்தல் விவகார ஆணையத்தின் தலைவர் டேவிட் லோக் கூறியுள்ளார். ஆட்சிமன்றத்தில் எந்த நடவடிக்கையும் இடம்பெறாமல் இருக்கும் காலம் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்றார் அவர். ஆர்டிஎச்கே (RTHK) எனும் அரசாங்க ஒலிபரப்புக் கழகத்திடம் திரு லோக் பேசினார்.

ஹாங்காங்கின் நலனுக்காகத் தேர்தலை நடத்துவது முக்கியம் என்று திரு லோக் தெரிவித்தார். அண்மைய தீச்சம்பவம் போன்ற பேரிடர்கள் நிகழ்வதைத் தவிர்க்கச் சீரமைப்பு நடவடிக்கைகள் அவசியம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் உதவக்கூடும் என்று திரு லோக் சொன்னார். ஹாங்காங்கில் அண்மையில் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு புளோக்குகளில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 159 பேர் மாண்டனர். நகரில் கிட்டத்தட்ட 80 ஆண்டில் நடந்த ஆக மோசமான தீச்சம்பவம் அது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு அரசாங்கம் தேர்தல் பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

இக்கட்டான இந்த நேரத்தில், வாக்காளர்கள் அவர்களின் கடமையை ஆற்றவேண்டும் என்று திரு லோக் வலியுறுத்தினார். ஹாங்காங்கின் நலனுக்கு அது முக்கியம் என்றார் அவர்.

நகரின் ஆட்சிமன்றத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பேர் தகுதிபெற்றுள்ளனர். அவர்கள் 90 மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். அரசாங்கம் சரிபார்த்துத் தெரிவுசெய்த 161 வேட்பாளர்களிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உறுப்பினர்கள் நான்காண்டுக்குச் சேவையாற்றுவர்.

இதற்கு முன்னர், ஹாங்காங் தேர்தல் நடைமுறைகளில் பெய்ஜிங் பெரிய மாற்றங்களைச் செய்தது. அதன் பிறகு 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், வாக்களிப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைவாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்